வேலூர் மாவட்டத்தில் பொது, தனியார் கட்டடங்களில் இருந்து புதன்கிழமை (மார்ச் 9) வரை 1,473 விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இரா.நந்தகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குழுவானது தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்டறிந்து உரிய அனுமதியின்றி இருந்த சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்கள் உதவியுடன் அகற்றி வருகிறது.
மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 908 பொது, 565 தனியார் கட்டடங்களில் காணப்பட்ட விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.