Enable Javscript for better performance
ஆம்பூர் ஒன்றியம் உருவாக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர்: ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

     வேலூர் மாவட்டத்தில் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தோல் தொழில் நகரம் ஆம்பூர். கடந்த 2010-ஆம் ஆண்டு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆம்பூர் வட்டம் தொடங்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டு வரை ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்தது.

    பிறகு தொகுதி மறுசீரமைப்பில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. பிறகு தொகுதி மறுசீரமைப்பில் 2011-ஆம் ஆண்டு மீண்டும் ஆம்பூர் தொகுதி உருவானது.  ஆம்பூர் நகரைச் சுற்றி பேர்ணாம்பட்டு, மாதனூர் ஒன்றியங்களின் பெரும்பாலான ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் பல்வேறு தேவை களுக்கும், மாணவ, மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகள் செல்வதற்கும் ஆம்பூருக்கு வரவேண்டியுள்ளது.

     மேலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், நல வாரியங்கள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் ஆம்பூரில் அமைந்துள்ளதால் மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றியங்களின் பெரும்பாலான ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆம்பூருக்கு வந்து செல்கின்றனர்.

     அதுபோல் மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றியங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள் ஆம்பூர் நகர வங்கிகளில் தான் உள்ளன.

    ஆனால், உள்ளாட்சித் துறை அலுவலகப் பணிகளுக்காக மட்டும்தான் பேர்ணாம்பட்டு, மாதனூருக்குச் செல்ல வேண்டியுள்ளது.

     இதற்காக அதிக நேரம் செலவழித்து நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆம்பூர் அருகிலுள்ள மாதனூர் ஒன்றியத்தின் ஊராட்சிகளான சோலூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாயக்கனேரி, நாச்சார்குப்பம், விண்ணமங்கலம், மின்னூர், செங்கிலிகுப்பம், கன்னடிகுப்பம், சோமலாபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சிகளான தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரியவரிக்கம், சின்னவரிக்கம், அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், பெரியகொம்மேஸ்வரம், கைலாசகிரி, நரியம்பட்டு, ராஜக்கல், அழிஞ்சிகுப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், கரும்பூர், பார்சனாப்பள்ளி, மோதகப்பள்ளி, கதவாளம், அரங்கல்துருகம், குமாரமங்கலம், வீராங்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மேல்சாணாங்குப்பம், வடகரை, பாப்பனப்பல்லி, சின்னப்பள்ளிகுப்பம், வடச்சேரி, கொல்லகுப்பம்  ஆகிய ஊராட்சிகளை சேர்ந்தவர்களும், தங்கள் பகுதிகளுக்கு வசதிகள் வேண்டி மனு கொடுக்க செல்வோர் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்குச் சென்று வருவதில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

     இதில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளாக இருப்பதால் குறித்த நேரத்துக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதில் வாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டங்களுக்கு ஊழியர்களும், பணியாளர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.   அது போன்ற கூட்டங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் நடைபெறும். அந்த கூட்டங்கள் நடைபெற்று முடிய இரவு 7 அல்லது 8 மணி வரைகூட ஆவதுண்டு.

    கூட்டத்தை முடித்து செல்லும் பெண்களின் நிலை வார்த்தையால் சொல்ல முடியாது.  பேர்ணாம்பட்டு, மாதனூர் ஒன்றியங்களின் மேற்கண்ட ஊராட்சிகளில் வசிப்போரும், வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்களும் பணிகள் நிமித்தமாக பயணிப்போரும் இந்த .ஊராட்சி ஒன்றியங்களின் மையப்பகுதியில் உள்ள ஆம்பூரை அன்றாடம் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். 

     ஆம்பூர் அருகே உள்ள மாதனூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆம்பூர் நகரம் மையப்பகுதியாக இருப்பதால் அவர்கள் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து ஆம்பூருக்கு வந்து செல்வது மிகவும் எளிதானது. 

    ஆம்பூரைச் சுற்றியுள்ள மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 35-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைத்து ஆம்பூர் ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

    எனவே ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய  ஒன்றியத்தை தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai