Enable Javscript for better performance
காலங்காலமாக காற்றில் பறக்கும்  வாக்குறுதிகள்: வேதனையில் வாணியம்பாடி தொகுதி மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    காலங்காலமாக காற்றில் பறக்கும்  வாக்குறுதிகள்: வேதனையில் வாணியம்பாடி தொகுதி மக்கள்

    By dn  |   Published on : 15th April 2016 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாணியம்பாடி: வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி வளர்ச்சி பெறாத நிலையில் உள்ளது. காலங்காலமாக தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இத்தொகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.

    தொகுதியின் தலைநகரான வாணியம்பாடி, வட்டத் தலைநகரமாகவும் உள்ளது. ஆனால் வாணியம்பாடியில் அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்படவில்லை.

    மேலும் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்,  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நியூடவுன் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அல்லது தரைப்பாலம், பேருந்து நிலைய விரிவாக்கம், புதூர்-முஸ்லிம்பூர் இடையே ரயில் பாதையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இதற்காக அவர்கள் தொடர்ந்து போராடி வந்தும் பயனில்லை.

    வாணியம்பாடி பகுதியில் பாலாறு மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பது முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. தோல் தொழிலாளர்களின் நலனை காத்திட அரசு சார்பில் தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பதும் நீண்டகாலக் கனவு.   

    ஒவ்வொரு  சட்டப்பேரவைத் தேர்தலின்போதும்  மக்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என  வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றபின் கண்டுகொள்வதில்லை என்பது தொகுதி மக்களின் ஆதங்கம்.  மேற்கண்ட எந்த கோரிக்கையும் இதுநாள் வரையில் நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வட்டத்  தலைநகரமும் வளர்ச்சி பெற்று வரும் நிலையில்,  வாணியம்பாடி தொகுதி மட்டும் பின்நோக்கி செல்வதாக அனைத்து தரப்பினரும் வேதனைப்படுகின்றனர்.

    கந்தலாகிப் போன கச்சேரி சாலை: வாணியம்பாடி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றானது கச்சேரி சாலை வழியாகத் தான் உதயேந்திரம், வளையாம்பட்டு, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட சுற்றிவட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் வாணியம்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

     மேலும் நூற்றுக்கணக்கான லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன.

    கச்சேரி  சாலை அருகில் வட்டாட்சியர் அலுவலகம்,  அரசுக் கருவூலம், சார்-பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், வணிக வரி அலுவலகம், நகர, கிராமிய, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆகிய 4 காவல் நிலையங்கள் உள்ளன.  இந்த அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் அன்றாடம் இதன் வழியாகத் தான் சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பெரும் பள்ளங்களும் உண்டு.

    தற்போது இந்தச் சாலை மிகவும் மோசமடைந்து முழுக்க முழுக்க மண் சாலையாக மாறிவிட்டது. ஒரு வாகனம் சென்றாலே தூசி பறக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதுடன் மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் வாணியம்பாடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவாரா?

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai