Enable Javscript for better performance
புளியந்தாங்கல் ஏரியில் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்கள்- Dinamani

சுடச்சுட

    

    புளியந்தாங்கல் ஏரியில் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்கள்

    By ராணிப்பேட்டை  |   Published on : 15th April 2016 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையை அடுத்த புளியந்தாங்கல் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.

    ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலந்ததால், மீன்கள் இறந்தனவா அல்லது அதிகமான வெயில் காரணமாக அவை இறந்தனவா என சந்தேகம் எழுந்துள்ளது.

    ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியந்தாங்கல் கிராமம் உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானத் தொழிலாக செய்து வருகின்றனர். மேற்கண்ட கிராமம் அருகே, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் நன்னீர் ஏரியை ஆதாரமாகக் கொண்டு விவசாயம், கால்நடை தொழில் நடைபெற்று வந்தது.

    சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கிய பிறகு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரை பெரும்பாலான தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பாமல் திறந்தவெளி கால்வாய்களில் திறந்து விட்டு வந்தன. அந்தக் கழிவுநீர், நேரடியாக புளியந்தாங்கல் கிராம நன்னீர் ஏரியில் கலந்தது.

    இதன் காரணமாக, அந்த ஏரியின்கீழ் பாசன வசதி பெற்று வந்த சுமார் 400 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.

    மேலும், விவசாயத்தை நம்பி இருந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் முற்றிலும் அழிந்து போனதால் புளியந்தாங்கல் கிராம மக்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறினர்.

    மேலும், தோல் கழிவுகளால் உண்டாகும் ரசாயன நச்சுக் காற்றை சுவாசித்தபடி பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுடன் அப்பகுதி மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக புளியந்தாங்கல் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது.

    இதனால், நன்னீர் ஏரி புத்துயிர் பெற்றது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் அந்த நீரைப் பயன்படுத்தி ஒரு போகம் விவசாயம் செய்து நெல் அறுவடை செய்தனர்.

    மேலும், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஏரியில் தண்ணீர் இருந்த காரணத்தால் மீன்கள் அதிக அளவு பெருகி வளர்ந்தன. நாளடைவில் ஏரியில் நீர் குறைந்ததால் சிலர் குத்தகை எடுத்து மீன் பிடித்து விற்பனை செய்து வந்தனர்.  இந்நிலையில், ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து மிதந்தன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்தனவா அல்லது அதிகப்படியான வெயிலைத் தாங்க முடியாமல் அவை இறந்தனவா என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

    எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai