Enable Javscript for better performance
முதியோர்களின் அறிவுரைகளை இளைய சமுதாயத்தினர் ஏற்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர்களின் அறிவுரைகளை இளைய சமுதாயத்தினர் ஏற்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

    By DIN  |   Published on : 17th November 2016 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதியோர்கள் கூறும் அறிவுரைகளை இளைய சமுதாயத்தினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வலியுறுத்திப் பேசினார்.
    வேலூர் நகர அரங்கில் சர்வதேச முதியோர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
    இந்தியாவில் 60 வயதைக் கடந்தவர்கள் 9.5 கோடி பேர் உள்ளனர். அவர்களில் 80 வயதைக் கடந்தவர்கள் 80 லட்சம் பேர் உள்ளனர். முதியோர்களை அன்போடும், பாசத்தோடும் அரவணைப்பது நமது கடமையாகும்.
    முதியோர்கள் வாழ்க்கை எனும் பாடத்தை வாழ்ந்து முடித்துவிட்ட அனுபவசாலிகள். அவர்கள் கூறும் அறிவுரைகளை இளைய தலைமுறையினர் ஏற்று நடக்க வேண்டும். ஆனால் தற்போது கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக்குடும்பமாக வாழும் போக்கு அதிகரித்துள்ளது.
    முதியோர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவது, தனிமையில் விடுவது வேதனைக்குரியது. இப்படிச் செய்பவர்கள் வரும்காலத்தில் தங்களுடைய பிள்ளைகளால் தனிமைப்படுத்தப்படுவோம் என்பதை உணர்ந்து பெற்றோர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்றார்.
    சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.எஸ்.டி.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், மூத்த வழக்குரைஞர் விஜயராகவலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் சந்தியா மகேஸ்வரி வரவேற்றார்.
    இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலாளர் சி.இந்தர்நாத், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலத் துறை தலைவர் மருத்துவர் இ.தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அப்பல்லோ மருத்துவமனை இணைந்து அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருக்காக நடத்திய இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார். இதில் திரளான அரசு ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai