சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலின் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை 11,065 பேர் மனுதாக்கல் செய்தனர்.
    மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள் உள்பட 7,881 பதவிகளுக்கான தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
    வேட்புமனு தாக்கலின் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை வேலூர் மாநகராட்சியில் திமுகவினர் 27 பேர், பாஜக 8, தேமுதிக 10, பாமக 5, காங்கிரஸ் 3 பேர் உள்பட 109 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    அதேபோல, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 32 பேர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,706, உறுப்பினருக்கு 8,161 பேர், நகராட்சிகளில் 360 பேர், பேரூராட்சிகளில் 248 பேர் என 11,065 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    கடந்த ஐந்து நாள்களில் மாவட்டம் முழுவதிலும் 14,365 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    விறுவிறுப்படைந்த தேர்தல் அலுவலகங்கள்: வேலூர் மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என கட்சித் தலைமை அறிவித்ததால் நுழைவு வாயிலில் பலத்த கெடுபிடிகளுக்குப் பிறகே வேட்பாளர்கள், கட்சியினர் அனுமதிக்கப்பட்டனர்.
     திமுக சார்பில் கடந்த முறை மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி தற்போது 4-வது வார்டில் போட்டியிடும் மருத்துவர் ராஜேஸ்வரி, 1-வது மண்டலக் குழுத் தலைவர் எம்.சுனில்குமார், 7-வது வார்டிலும், மாவட்ட பாஜக செயலாளர் எஸ்.எல்.பாபு 36-வது வார்டில் மனு தாக்கல் செய்தனர்.  
     இதுதவிர, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    அரக்கோணத்தில்...
    கடந்த நான்கு நாள்களாக மனு தாக்கலே தொடங்காத நிலையில், அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றிய வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நான்கு நாள்கள் ஆன நிலையில், வியாழக்கிழமை வரை வேட்புமனு தொடங்கப்படாமலேயே இருந்தது. இந்நிலை மாறி அரக்கோணம் நகராட்சியில் ஒரே நாளில் 23 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு நான்கு பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இதுவரை 62 பேரும், கிராம ஊராட்சி மன்ற வார்டுகளுக்கு வெள்ளிக்கிழமை வரை 287 பேரும் தங்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
     அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர்களாக 4-ஆம் வார்டில் காயத்ரி, 5-ல் அன்பு, 14-ல் ஜெயலட்சுமி, 23-ல் ஈஸ்வரிமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளர்களாக 10-ல் இந்திரன்குமார், 20-ல் பொன். நடராஜன், 35-ல் விஸ்வநாதன் ஆகியோரும், பாஜக வேட்பாளர்களாக 6-ல் சின்னிபிரசன்னா, 30-ல் ஜெகன்மோகன் ஆகியோரும், தேமுதிக சார்பில் 5-ல் கே.பி சரவணனும், மேலும் 13 பேர் சுயேச்சைகளாகவும் மனு தாக்கல் செய்தனர். அரக்கோணம் ஒன்றிய வார்டுகளுக்கு சுயேச்சைகளே நான்கு பேரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
     அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையிலும் வெள்ளிக்கிழமை வரை நகராட்சி, ஒன்றியம் இரு இடங்களிலும் அதிமுகவினர் யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. திமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் சின்னத்துக்கான அங்கீகார கடிதத்தை இணைக்காமல் மனுக்களை தாக்கல் செய்தனர்.
    வேட்புமனு தாக்கலுக்கு எஞ்சியுள்ள கடைசி நாளான திங்கள்கிழமை தான் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வர் எனத் தெரிகிறது.
    நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இரு இடங்களிலும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மக்கள் அதிகளவில் குவிந்ததால், நகர காவல் உதவி ஆய்வாளர் அன்புசெல்வி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு தாக்கல் செய்ய ஒரு வேட்பாளருடன் இருவர் மட்டுமே அலுவலக வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai