Enable Javscript for better performance
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் தேசிய அளவில் முதலிடம்'- Dinamani

சுடச்சுட

    

    புதுதில்லியில் உள்ள என்சிஇஆர்டி நிறுவனம் தேசிய அளவில் நடத்திய கள ஆய்வில் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளின் தரம் முதலிடத்தில் உள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
    அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
    இதில் பி.எட். தேர்வில் மாநில அளவில் தமிழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி வி.எஸ்.இந்திராணிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசியதாவது:
    தமிழ்நாட்டில் தற்போது 55 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இது இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாகும். எந்தப் பணிக்கும் இல்லாத பெருமை ஆசிரியப்பணிக்கு உண்டு. இதற்கேற்றாற் போல் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு திறன் தெரிந்தவர்கள் பல லட்சம் பேர் தேவைப்பட உள்ளனர்.
    மாணவர்களை திறன்பயிற்சி பெற்றவர்களாக மாற்ற வேண்டும். இந்தியாவில் அரசு உயர் நிறுவனமான என்சிஇஆர்டி நடத்திய கள ஆய்வில் தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 3 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் தரம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே ஆசிரியர் கல்விக்கென பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் மட்டுமே என்றார்.
    இதில் குழுமச் செயலர் டி.எஸ்.ரவிகுமார், இயக்குநர் கே.சாம்பமூர்த்தி, ரூரல் வெல்ஃபேர் அறக்கட்டளை நிர்வாகி சி.எஸ்.சந்திரமெளலி, ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜி.பார்த்தீபன், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ் உள்ளிட்ட பலர்
    பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai