சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான மனுதாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 13,779 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள் உள்பட 7,881 பதவிகளுக்கான தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
    வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வேலூர் மாநகராட்சியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தமாகா, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சைகள் என 220 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரையில் 431 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    அதேபோல, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 138, கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,853, உறுப்பினருக்கு 8,232 பேர், நகராட்சிகளில் 1,217 பேர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு 1,416 என 13,779 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதிலும் 28,657 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் நகராட்சி வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கலில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக கடைசி நாளான திங்கள்கிழமை வரை 199 மனுக்கள் பெறப்பட்டன.
    உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு தொடக்கத்தில் இருந்து நான்கு நாள்கள் வரை அரக்கோணம் நகராட்சியில் ஒருமனு கூட தாக்கல் செய்யப்படாத நிலை இருந்தது. சனிக்கிழமை வரை 23 மனுக்கள் தாக்கலாகி இருந்த நிலையில், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 199 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிகபட்சமாக 13-ஆவது வார்டுக்கு 12 பேரும் குறைந்தபட்சமாக 4, 14, 23, 36 ஆகிய வார்டுகளில் தலா மூன்று பேர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
    அதிமுகவில் நகர்மன்றத் தலைவர் கண்ணதாசன் 25-ஆவது வார்டிலும், நகர அதிமுக செயலர் துரைகுப்புசாமி 29-ஆவது வார்டிலும், மாவட்டப் பிரதிநிதிகள் ஜெர்ரி 32-ஆவது வார்டிலும், அய்யப்பன் 19-ஆவது வார்டிலும், மாவட்ட திமுக துணைச் செயலர் என்.ராஜ்குமார் 35-ஆவது வார்டிலும், நகரச் செயலர் ஐ.ராப்சன் 6-ஆவது வார்டிலும், துணைச் செயலர் அன்புலாரன்ஸ் 10-ஆவது வார்டிலும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸில் நகர துணைத் தலைவர் தமீன் 13-ஆவது வார்டிலும், தேமுதிகவில் நகர பொருளாளர் கே.பி.சரவணன் 5-ஆவது வார்டிலும், பாஜகவில் நகர தலைவர் ஜெகன்மோகன் 30-ஆவது வார்டிலும், பொதுச் செயலர் சின்னிபிரசன்னா 6-ஆவது வார்டிலும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லா 34-ஆவது வார்டிலும், பாமகவில் வன்னியர் சங்க மாவட்டச் செயலர் கோ.ஏழுமலை 2-ஆவது வார்டிலும், மனிதநேய கட்சி நிர்வாகி முகமது அலி 13-ஆவது வார்டிலும் தங்கள் மனுக்களை தாக்கல்
    செய்தனர்.
    வேட்புமனுக்களின் பரிசீலனை 4-ஆம் தேதியும், வாபஸ் பெறுவதற்கு 6-ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
    ராணிப்பேட்டையில்...
    ராணிப்பேட்டை, அக். 3: ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக, திமுக உள்பட 124 பேர் மனு தாக்கல் செய்தனர்.
    இதில் அதிமுக சார்பில் 42 பேரும், திமுக மற்றும் கூட்டணி சார்பில் 38 பேரும், பிஜேபி சார்பில் 6 பேரும், பாமக சார்பில் 4 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 4 பேரும், தேமுதிக சார்பில் 3 பேரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 1, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1, சுயேச்சைகள் 25 என மொத்தம் 124 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக ராணிப்பேட்டை நகர தேர்தல் நடத்தும் அலுவலர் செ.பாரிஜாதம் தெரிவித்துள்ளார்.
    அதே போல் அம்மூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் போட்டியிட 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    இதில் அதிமுக 16, திமுக 16, பாமக 20, காங்கிரஸ் 3, தமிழ் மாநில காங்கிரஸ் 3, தேமுதிக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1, சுயேச்சைகள் 7 என மொத்தம் 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அம்மூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.பழனி தெரிவித்துள்ளார்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர், அக். 3: ஆம்பூர் நகராட்சியில் 29-வது வார்டுக்கு திமுக வேட்பாளர் மைனாவதி விமலநாதன் அண்மையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    மனு தாக்கலின்போது, நகர திமுக செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் சாம் செல்லபாண்டியன், நிர்வாகிகள் வில்வநாதன், யுவராஜ், மோகன், கிளைச் செயலாளர் விமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
    ஆற்காட்டில்...
    ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டு உறுப்பினர் பதவிக்கு 133 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     ஆற்காடு நகராட்சியில் உள்ள அதிமுக, திமுக சார்பில் 33 பேரும், பாமகவினர் 19 பேரும், தேமுதிக 3, மதிமுக 2,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 2, தமாகா மற்றும் பாஜக சார்பில் தலா 1, சுயேச்சைகள் 39 என மொத்தம் 133 பேர் நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
    ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்:ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 158 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மாவட்ட ஊராட்சிக் குழு 30-வது வார்டுக்கு  அதிமுக சார்பில் 1, திமுக சார்பில் 2 பேர், தேமுதிக 1, சுயேச்சை 2, என 6 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் வார்டு 31-க்கு  அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில்2 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 1 ஆக 4 பேர் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
    ஆற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் உள்ள 17 வார்டுகளில் அதிமுக சார்பில் ஒன்றிய அதிமுக செயலாளர் தாஜ்புரா எம்.குட்டி, ரேணுகா வெங்கடேசன், கனகா குமரேசன், எஸ்.சிகாமணி, புதுப்பாடி சி.ராஜா உள்பட 17 பேர்,   திமுக, பாமக, தேமுதிகவினர் என 68 பேர் வேட்புனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
    மேல்விஷாரம் நகராட்சியில்..  
    ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     மேல்விஷாரம் நகர அதிமுக செயலாளர் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா உள்பட 21 பேர்  அதிமுக சார்பிலும், திமுக சார்பில் 21 பேரும் காங்கிரஸ் 4, பாமக 6, தேமுதிக 7, மதிமுக 2, நாம் தமிழர் கட்சி 7, ஏஐஎம்ஐ சார்பில் 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6, மனிதநேய மக்கள் கட்சி 2, சுயேச்சை 67 என மொத்தம் 149 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 212 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
     வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு அதிமுக சார்பில் 36 வேட்பாளர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். முன்னதாக சிஎன்ஏ சாலையில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து அமைச்சர் நீலோபர் கபீல் தலைமையில் நகரச் செயலாளர் சதாசிவம் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 212 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 46 வேட்பு மனுக்கள் சுயேச்சைகளாகும்.  
     ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோவி.ச.பிரபாகரன், மணி, பரமசிவம், லீலாவதி,    பலராமன், சங்கீதா உள்பட 18 பேர் மற்றும் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் ஊர்வலமாகச் சென்று தங்களது வேட்பு மனுக்களை உதவி தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.  
     திமுகவில் மாவட்ட முன்னாள் செயலாளர் தேவராஜி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 84 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு மொத்தம் 168 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 912 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலங்காயம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த 15 பேரும், திமுக, பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 54 பேர் மனு தாக்கல் செய்தனர்.  
     இதேபோல் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் அதிமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர் நகராட்சியில் திங்கள்கிழமை வரை 189 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     ஆம்பூர் நகராட்சியில் திங்கள்கிழமை வரை மொத்தம் 189 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் 37 பேரும், திமுக சார்பில் 24 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும், தேமுதிக 1, மதிமுக 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, பாஜக 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ் கட்சி 2, பகுஜன் சமாஜ் 3, சுயேச்சைகள் 108 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    29-வது வார்டில் அதிமுக சார்பில் 2 பேரும், திமுக சார்பில் 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சூப்பர் நேஷன் பார்ட்டி உள்ளிட்ட கட்சிகள் சுயேச்சைகளாக கருதப்படுகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai