சுடச்சுட

  

  கர்நாடக எல்லையில் நீடிக்கும் பதற்றம்: போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு

  By DIN  |   Published on : 05th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி விவகாரத்தில் தமிழகம் - கர்நாடக மாநில எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தால் ஒரு மாதமாக பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
  காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
  இதையடுத்து வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு தினந்தோறும் இயக்கப்படும் 36 அரசுப் பேருந்துகள், சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருவுக்குச் செல்லும் 20 அரசு விரைவுப் பேருந்துகள், 20-க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் கடந்த 29 நாள்களாக மாநில எல்லையான ஒசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
  வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் தொழில் நிமித்தமாக பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.
  இந்நிலையில், இரு மாநிலங்களிடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதையடுத்து பெரும்பாலானோர் ரயில்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பிருந்தாவன், லால்பார்க், பெங்களூரு விரைவு ரயில், டபுள் டக்கர் ரயில்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
  இதில், 24 பெட்டிகள் கொண்ட பிருந்தாவன் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 8-ம், 22 பெட்டிகள் கொண்ட லால்பாக், பெங்களூரு விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 6-ம் உள்ளன. இந்த ரயில்கள் அரக்கோணம், வாலாஜா, காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இது தவிர ஆந்திர மாநிலத்தில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூருவுக்கு இரண்டு ரயில்கள், வடமாநிலத்திலிருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால், தூய்மை குறைவு காரணமாக இந்த ரயில்களில் செல்ல வேலூர் மாவட்ட பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
  சென்னையில் இருந்து இயக்கப்படும் மேற்கண்ட நான்கு விரைவு ரயில்களில் மட்டுமே பெங்களூரு செல்வதற்கு பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்த ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
  வார நாள்களில் பெரும்பாலும் காலியாக சென்று வந்த இந்த ரயில்களில் தற்போது முன்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக லால்பாக், பெங்களூரு விரைவு ரயில்களில் புதன்கிழமை (அக்.5) முதல் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுகிறது. பயணிகள் பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தை நாடியுள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
  இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
  விழுப்புரம் கோட்டத்திலிருந்து 24 பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் இருந்து 12 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 20 பேருந்துகளும் பெங்களூருவுக்கு தினந்தோறும் இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஒரு மாதமாக பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
  பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ஒசூர் வரையில் சென்று திரும்புவதன் மூலம் இதுவரையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.5 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai