Enable Javscript for better performance
திமுக வேட்பாளரின் மனு நிராகரிப்பு: கட்சியினர் போராட்டம்: அதிமுகவினரும் எதிர்ப்பு கோஷம் எழுப்பியதால்- Dinamani

சுடச்சுட

    

    திமுக வேட்பாளரின் மனு நிராகரிப்பு: கட்சியினர் போராட்டம்: அதிமுகவினரும் எதிர்ப்பு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

    By DIN  |   Published on : 05th October 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் நகராட்சியில், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாததால், திமுக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
    இதையடுத்து அக்கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவினரும் எதிர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன.
    குடியாத்தம் நகராட்சி, 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, மாற்று வேட்பாளராக எம்.திருஞானம், திமுக சார்பில் ஜே.மோகனவேல், மாற்று வேட்பாளராக பி.சரவணன் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
    மனுக்கள் பரிசீலனையின்போது திமுகவைச் சேர்ந்த மோகனவேலும், சரவணனும் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாதது தெரியவந்தது.
    இதையடுத்து அந்த 2 வேட்பு மனுக்களையும் நிராகரிப்பதாக உதவித் தேர்தல் அலுவலர் ஏ.உலகநாதன் தெரிவித்தார்.
     இதையடுத்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினரும் கோஷங்களை எழுப்பினர். இருதரப்பினரையும் போலீஸார் அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர்.
    இதையடுத்து திமுகவினர் நகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டித்து அதிமுகவினரும் கூட்டமாகக் கூடி கோஷம் எழுப்பினர்.
    இதனால் குடியாத்தம்- வேலூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இந்நிலையில் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் சம்பவ இடத்துக்கு வந்து திமுகவினரை சமரசம் செய்தார்.
    பின்னர் நகராட்சி தேர்தல் அலுவலர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். வேட்புமனு நிராகரிப்புக்கான காரணங்களை அதிகாரிகள் அவரிடம் கூறினர்.
     பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளதாகவும், அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து திமுகவினரை அமைதிப்படுத்திவிட்டு நந்தகுமார் புறப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai