சுடச்சுட

  

  மனு தாக்கல் முடிந்தபின் வேட்பு மனுக்களில் திருத்தம்: நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்துக் கட்சியினர்

  By DIN  |   Published on : 05th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாணியம்பாடி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்த மனுக்களை திங்கள்கிழமை இரவு அதிமுகவைச் சேர்ந்த சிலர் திருத்தம் செய்ததாகக் கூறியும், அதைக் கண்டித்தும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்துக் கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் முடிவு பெற்றது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் அதிமுகவைச் சேர்ந்த சிலர் நகராட்சி அலுவலகத்தில் நுழைந்து வேட்பு மனுக்களை திருத்தம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் இரவு 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து அதிமுகவினரையும், தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் கண்டித்து முற்றுகையிட்டனர்.  இதனை அறிந்த மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் டிஎஸ்பி சுந்தரம், வட்டாட்சியர் பாக்யலட்சுமி, நகராட்சி ஆணையர் அலமேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் வேட்பு மனுக்களை திருத்தம் செய்த அதிமுகவினரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் நள்ளிரவு 2 மணி வரை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதையடுத்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்த மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  பின்னர் திமுக சார்பில் நகரக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து
  சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai