Enable Javscript for better performance
போலி ஜாதி சான்றிதழ் அளித்து மனு தாக்கல்: நடவடிக்கை கோரி சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    போலி ஜாதி சான்றிதழ் அளித்து மனு தாக்கல்: நடவடிக்கை கோரி சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 07th October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போலி ஜாதி சான்றிதழ் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார்-ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
     உள்ளாட்சித் தேர்தலில் திருப்பத்தூர் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடர் இனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் செளளூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை கடந்த 3-ஆம் தேதி சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து அம்மையப்ப நகர் குப்பான்டி வட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுவர்) ஆதிதிராவிடர் என போலிச் சான்றிதழ் கொடுத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 4-ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அண்ணாதுரை மனு அளித்தார். எனினும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
    இதனையடுத்து அண்ணாதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  
    அப்போது சார்-ஆட்சியருக்கு முறைப்படி மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேர்முக உதவியாளர் கீதாராணி கூறினார். இதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கீதாராணியிடம், புகார் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai