சுடச்சுட

    

    உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் உயிரிழப்பதாக வேலூர் மண்டல பூச்சியியல் வல்லுனர் கோபால ரத்தினம் தெரிவித்தார்.
    திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலூர்,திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்ட உறுப்பு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    இதில் வேலூர் மண்டல பூச்சியியல் குழுவின் மூத்த பூச்சியியல் வல்லுனர் கோபால ரத்தினம் மேலும் பேசியதாவது: பூமியில் சுமார் 350 வகையான கொசுக்கள் உள்ளதாகவும், அதில் 3 அல்லது 4 வகையான கொசுக்கள் மட்டுமே நோய் பரப்பும் கொசுக்கள் என கண்டறியப்பட்டுள்ளன. கொசுக் கடியால் மலேரியா, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் உண்டாகிறது.
    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தொடர் தடுப்பு நடவடிக்கையால் தற்போது அவற்றின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. தற்போது நாடெங்கும் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸ் வகை டெங்கு காய்ச்சலுக்கு மருந்தும் இல்லை, தடுப்பு ஊசியும் இல்லை. அதேபோல் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜிகா வைரஸ் காய்ச்சல் இந்தியாவுக்குள் நுழைய தயாராக உள்ளது. இதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
    உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் கொசுக் கடியால் ஏற்படும் நோய்களால் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவில் அபாயகரமான விலங்கினங்களின் பட்டியலில் சிங்கம், புலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் கொசு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
    மத்திய அரசு கொசு ஒழிப்புக்காக ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவழித்தும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. எனவே கொசுக்களை ஒழிக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
    அதனைத் தொடர்ந்து அனைவரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. முகாமுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்தார்.
    பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம்.செந்தில்குமார் வரவேற்றார். பதிவாளர் பி.அசோகன், புல முதல்வர் வி.பெருவழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்துறை பேராசிரியருமான எம்.செந்தில்குமார் நன்றி கூறினார்.
    முகாமில் திருவலம் வட்டார மருத்துவ அலுவலர் ராணி, சித்த மருத்துவர் மல்லிகா, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். அலுவலர்கள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai