சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
    குடியாத்தம் இந்திரா நகர், சோபி மஸ்தான் தர்கா பகுதியைச் சேர்ந்த வகாப்ஜானின் மகன் கலீல்பாஷா(38). இவர் இரு சக்கர வாகனத்தில் சென்று பூட்டு விற்பது, பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 16.2.2012 அன்று குடியாத்தம் சந்தப்பேட்டை அருகே சென்றபோது, பேர்ணாம்பட்டிலிருந்து, குடியாத்தம் வந்த அரசு பஸ் மோதியதில் கலீல்பாஷா நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    இதையடுத்து இழப்பீடு கோரி, கலீல்பாஷாவின் தாய் மும்தாஜ், மகன்கள் இர்பான் (13), இம்ரான் (10), சல்மான் (8) ஆகியோர் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
    வழக்கை விசாரித்த நீதிபதி, கலீல்பாஷாவின் குடும்பத்துக்கு ரூ. 8.35 லட்சம் இழப்பீடு வழங்குமாறு 11.2.2015 அன்று அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் மேல்முறையீடு செய்தது.
    பின்னர் மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) இதுகுறித்து விவாதிக்கப்பட்டு 4 வாரங்களுக்குள் ரூ. 9.30 லட்சம் வழங்குமாறு நீதிபதி விமலா உத்தரவிட்டார்.
    அரசுப் போக்குவரத்துக் கழகம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், வழக்குரைஞர் லோகநாதன் மூலம் நிறைவேற்று மனு சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தயாநிதி அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்யுமாறு கடந்த 27.9.2016 அன்று உத்தரவிட்டார்.
    இதையடுத்து அமீனா சிவராஜ் தலைமையில், நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குடியாத்தம் - வேலூர் இடையே இயங்கும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai