Enable Javscript for better performance
கொன்று புதைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் சடலம் தோண்டியெடுப்பு: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொன்று புதைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் சடலம் தோண்டியெடுப்பு: 5 பேர் கைது

    By DIN  |   Published on : 12th October 2016 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில், கொலை செய்து புதைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக சரணடைந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர், தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (23). ஆட்டோ ஓட்டுநரான இவரது ஆட்டோவை பெருமுகையைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். வாடகை பணத்தை சரிவர கொடுக்காததால் இருவருக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
    இந்த நிலையில், சந்தோஷ்குமாருடன் மது அருந்திய சதீஷ்குமார், பணம் கேட்டால் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தைச் சேர்ந்த ரெளடி தினேஷ்குமாரிடம் கூறி விடுவதாக எச்சரித்ததாகத் தெரிகிறது.
    இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், ரெளடி தினேஷ்குமார் குறித்து தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை செல்லிடப்பேசியில் பதிவு செய்த சதீஷ்குமார், அதுகுறித்த விடியோ காட்சிகளை தினேஷ்குமாரிடம் காண்பித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், சந்தோஷ்குமாரை கொல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது.
    இதையடுத்து கடந்த அக்.3-ஆம் தேதி தோட்டப்பாளையம் சென்ற சதீஷ்குமார், வீட்டில் இருந்த சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் சந்தோஷ்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அக்.6-ஆம் தேதி சந்தோஷ்குமாரின் தாய் விமலா வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.
    இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த வீச்சு என்ற தினேஷ்குமார் (32), பெருமுகை சதீஷ்குமார், சத்துவாச்சாரி பிரபு (22), அலமேலுமங்காபுரம் கணேஷ் (23), வரதன் (30) ஆகியோர் வடக்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சரணடைந்தனர்.
    அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சந்தோஷ்குமாரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்து சத்துவாச்சாரி பாலாற்றங்கரையில் புதைத்ததாகக் தெரிவித்தனர்.
    இதனைத் தொடர்ந்து, வேலூர் வட்டாட்சியர் பழனி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம், காவல் ஆய்வாளர்கள் புகழேந்தி, அறிவழகன் ஆகியோர் முன்னிலையில், புதைக்கப்பட்ட சந்தோஷ்குமாரின் சடலம் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு  அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai