சுடச்சுட

    

    பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி வெள்ளத்துக்கு உட்படும் தன்மை கொண்டதா எனக் கண்டறிந்து, பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் பாதையை முன்னெச்சரிகையாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    சர்வதேச பேரிடர் தணிக்கும் நாளை முன்னிட்டு, வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
    பொதுமக்கள் வாழும் இடங்களில் அதிகமான மழைப் பொழிவின் காரணமாகவோ, ஏரிகள், ஆறுகளின் கரை உடைப்பினாலோ, நீர் உடனடியாக திறந்து விடப்படுவதாலோ, வெளியேற வழியின்றி நீர் சேர்ந்தாலோ, ஆற்று வெள்ளம் உட்புகுந்தாலோ அங்கு வெள்ளச் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதி வெள்ள பாதிப்புக்கு உள்படும் தன்மை கொண்டதா என்பதை முன்னரே கண்டறிந்து கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லும் பாதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எடுத்துச் செல்லத்தக்க அத்தியாவசிய பொருள்கள், டார்ச் மற்றும் உதிரி பேட்டரிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். குடிநீர், உலர் உணவு வகைகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேமித்து வையுங்கள்.  மண்ணெண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் துணிகளையும் மதிப்புள்ள பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, நீர்புகாத பைகளை பயன்படுத்துங்கள். குடை மற்றும் மூங்கில் கொம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டி மற்றும் பொருள்களைக் கட்ட திடமான கயிற்றை வீட்டில் வைத்திருங்கள்.
    வெள்ள அபாயம் நேரிட்டு வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தால் அவசர காலத்துக்காக நீர் புகாத பையில் எடுத்துச் செல்ல வெதுவெதுப்பான ஆடைகள், அடிப்படை மருந்துகள், விலை உயர்ந்த பொருள்கள், படுக்கைகள் ஆகியவற்றை கட்டையில் கட்ட வேண்டும்.
    கட்டையுடன் வெளியேறி சென்றடையும் முகவரியை உள்ளூர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மரச்சாமான்கள், துணிமணிகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள், படுக்கைகளை மேஜைகள் மற்றும் அலமாரிகள் போன்ற உயரமான இடத்தில் வைக்க வேண்டும். மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினை துண்டிக்க வேண்டும்.
    வெளியேறினாலும், வீட்டில் தங்கி இருந்தாலும் கழிப்பிட துளை மீதும் குளியலறை, துணி துவைக்கும் அறையின் கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும். இதன் மூலம் கழிவுநீர் மீண்டும் உள்புகுவதை தடுக்க இயலும். வீட்டைப் பூட்டி வைக்கவும். பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் விரைந்து வெளியேறுங்கள்.
    வெள்ளத்தின்போது, கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். பால் கலக்காத தேநீர், அரிசி கஞ்சி, இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உணவை மூடி வைக்க வேண்டும்.
    வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக உணவை உட்கொள்ள வேண்டாம். அங்கன்வாடி ஊழியர்களை தொடர்பு கொண்டு சர்க்கரை, உப்புக் கரைசலைப் பெற்று அதை உட்கொள்ளுங்கள். உள்ளூர் அலுவலர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எல்லா வகையிலும் உதவுங்கள்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai