சுடச்சுட

  

  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோருக்கு கண்ணொளி மீட்பு: ராணிப்பேட்டை ஜேசிஐ சங்கம் சாதனை

  By DIN  |   Published on : 14th October 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராணிப்பேட்டை ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜேசிஐ சங்கம்) மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய முதியோருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து சாதனை புரிந்து வருகிறது.
  ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் விடியும் முன்னரே ராணிப்பேட்டை நவலர்பூர் கங்காதரா மெட்ரிக். பள்ளி வளாகம் பரபரப்பாகி விடும்.  
  பள்ளி வளாகம் முழுவதும் சுமார் 45 வயது தொடங்கி 75 வயது வரையுள்ள முதியோர்கள் 150 பேர் வரை கண்ணொளி சிகிச்சைக்கு பரிசோதித்துக் கொள்ள காலை 7 மணி முதல் வரத் தொடங்கி விடுவர்.
  காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை ஜேசிஐ சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்களும், கோவை சங்கரா கண் மருத்துவமனைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகளில் கண் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வருகை தருவர். தொடர்ந்து முதியோர்களை அமர வைத்து அவர்களுக்கான அடையாள அட்டையை வழங்குவர். பின்னர் கோவை சங்கரா கண் மருத்துவமனையின் அனுபவம் மிக்க மருத்துவர்களால் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பரிசோதனைக்குப் பின் கண்புரை அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.
  பரிந்துரை செய்யப்பட்டவர்கள் அனைவரையும் கோவை சங்கரா கண் மருத்துவமனை பேருந்துகளில் கோவைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் விழி லென்ஸ் (ஐஞக) பொருத்துதல், உணவு, தங்குமிடம், மருந்து மற்றும் கோவை சென்று வர போக்குவரத்து செலவுகள் அனைத்தும் இலவசம். அத்துடன் அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து கண் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டு பார்வைக் குறைபாட்டை தடுத்து, கண்ணொளியை மீட்டு பயனடையச் செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 149 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 22 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  இதுகுறித்து ஜேசிஐ முன்னாள் தலைவரும், இலவச கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளருமான இ.மணிவண்ணன் கூறியதாவது:
  1997-இல் ராணிப்பேட்டை ஜேசிஐ தலைவராக இருந்த சந்திரமோகனால், அவரது பெற்றோர் நினைவாக பழனியம்மாள் - கந்தசாமி அறக்கட்டளை சார்பில் இது தொடங்கப்பட்டது.
  கிராமப்புறத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய முதியோர் மற்றும் பொதுமக்களின் கண் பார்வை குறைபாடுகளைக் கண்டறிந்து, பார்வை இழப்பை தடுத்து மீண்டும் கண்ணொளி பெரும் நோக்கில் இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்கப்பட்டு கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
  மாதம்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமில், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, திருவலம், திமிரி, காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த முதியோர் 100 முதல் 150 பேர் வரை வருகை தருவர்.
  அவர்களுக்கு கோவை சங்கரா கண் மருத்துவமனையின் அனுபவம் மிக்க மருத்துவர்களால் அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கண்புரை அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு இலவச அறுவைச் சிகிச்சை, மருந்து, கண்ணாடி, போக்குவரத்து செலவுகள் உள்பட அனைத்தும் இலவசமாக செய்யப்படும் என்றார்.
  இந்த உன்னதமான பணியில் ஜேசிஐ நிர்வாகிகளான பி.ஜி.பச்சையப்பன், முன்னாள் ராணுவ வீரர் ஏழுமலை ஆறுமுகம், என்.ஆர்.மணிகண்டன், கங்காதரா பள்ளித் தாளாளர் பாபு, தற்போதைய ஜேசிஐ தலைவர் பி.அரவிந்குமார், தன்னார்வலர்கள் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
   இலவச கண் சிகிச்சை தேவைப்படுவோர் எங்களது செல்லிடப்பேசியில் எந்த நேரமும் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai