Enable Javscript for better performance
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் முறையற்ற விலை நிர்ணயம்: அடாவடியை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்க- Dinamani

சுடச்சுட

    

    ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் முறையற்ற விலை நிர்ணயம்: அடாவடியை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறையற்ற விலை நிர்ணயம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், காவேரிப்பாக்கத்தைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர். இங்கு அதிகார பலமுள்ள வியாபாரிகள் சிலர் 75 கிலோ நெல் மூட்டையை ரூ. 700 முதல் ரூ. 900 வரை விலைக்கு எடுப்பதாகவும், இதே நெல் மூட்டை வாலாஜாபேட்டையை அடுத்த அம்மூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விலை போவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
    இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத விவசாயிகள் கூறியதாவது:  ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூ. 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் ஒரு மூட்டை நெல் ரூ. 700 முதல் ரூ. 900 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
    காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதிகார பலமுள்ள நெல் வியாபாரிகள் சிலர், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளை விற்பனைக் கூடத்தில் உள்ளே வர அனுமதிப்பதில்லை. மேலும் விவசாயிகளிடம் இருந்து மிகவும் குறைந்த விலையில் நெல்லை கொள்முதல் செய்து, வெளியூர் விபாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
     இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, இரவு பகல் பாராமல் உழைத்து நெல்லை அறுவடை செய்து  கொண்டு வரும் நாங்கள் நஷ்டம் அடைகிறோம். எங்களிடம் இருந்து நெல்லை வாங்கி விற்கும் இடைத் தரகர்கள் அதிக லாபம் பார்க்கின்றனர். இதனால் காவேரிப்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம் என்றனர்.
     இதனால் தொலைவில் உள்ள அம்மூர், கலவை, காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு செல்கின்றனர். இதன் காரணமாக காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் வருவதில்லை. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் வாலாஜாபேட்டையை அடுத்த அம்மூர்  விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்வதால் அங்கு  நெல் மூட்டைகள் வைக்க இடமில்லாத நிலை ஏற்படுகிறது.
     எனவே காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அராஜகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உர மூட்டைகளுக்கு அந்தந்த நிறுவனங்களே விலை நிர்ணயிப்பது போன்று நெல் மூட்டைகளுக்கும் விவசாயிகளே விலை நிர்ணயிக்கும் நிலை வர வேண்டும். இல்லாவிட்டால் அரசே ஒரு நெல் மூட்டைக்கு குறைந்தபட்ச விலை ரூ. 1,000-ஐ நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai