சுடச்சுட

  

  திருப்பத்தூர் அருகே வனப் பகுதியில் தேன், மாவள்ளி கிழங்கு எடுக்கச் சென்றபோது பாறை சரிந்து விழுந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
   வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் ஜவ்வாதுமலை தொடர் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வனப் பகுதியில் உள்ள தேன், மாவள்ளி கிழங்கு, கடுக்காய், மூங்கில் அரிசி உள்ளிட்டவற்றை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
   இந்நிலையில்   புதூர்நாடு  அடுத்த சித்தூர் புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் (26), விஜய்(22), இவரது தம்பி குமார் (20), உறவினர் கோவிந்தராஜ் (22) ஆகிய 4 பேரும் தேன் மற்றும் மாவள்ளி கிழங்கு எடுப்பதற்காக ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள மாம்பாக்கம் காப்புகாட்டுப் பகுதியில் உள்ள குரங்குபாறை பள்ளம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்றனர். அப்போது வெங்கட்ராமன், விஜய் இருவரும் ஒரு பெரிய பாறையின் கீழே இருந்த மாவள்ளி கிழங்கு எடுக்க முயன்றுள்ளனர். மேலே குமார், கோவிந்தராஜ் இருவரும் காத்திருந்துள்ளனர். அப்போது கிழங்கு எடுக்க மண்ணைத் தோண்டியபோது, பாறை திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதில் பாறையின் அடியில் சிக்கிய வெங்கட்ராமன், விஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதைப் பார்த்த குமார், கோவிந்தராஜ் இருவரும் கிராமப் பகுதிக்கு வந்து அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
   இதையடுத்து திருப்பத்தூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் முகமது ரபீக், வனச் சரக அலுவலர் பரமசிவம் தலைமையிலான வனத் துறையினர் மாலை 7 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு தீப்பந்தத்தின் உதவியுடன் பாறையின் அடியில் சிக்கியிருந்த இருவரின் சடலங்களையும் மீட்டனர். உடல்கள் முழுவதும் நசுங்கி இருந்ததால் அவற்றை டோலி கட்டி எடுத்து வந்தனர். பின்னர் சடலங்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   இதுகுறித்து திருப்பத்தூர் வனத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai