சுடச்சுட

    

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை வைத்து பார்வையாளர்களை அசத்தினர்.
    வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்
    கிழமை அறிவியல் தின விழா கண்காட்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மனோகரன், பிரியதர்ஷினி ஆகியோர் இதனைப் பார்வையிட்டு படைப்புகளை வைத்திருந்த மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
    ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) சி.ராமமூர்த்தி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    ஜங்காலப்பள்ளியில்...
    அதேபோல, ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி தின விழாவுக்கு தலைமையாசிரியர் சீ.முரளீதர் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஆர்.அருள்குமார் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் செழியன் முன்னிலை வகித்தார்.
    கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியர் ஆர்.வினோத்குமார் நன்றி கூறினார்.
    அரசு மருத்துவக் கல்லூரியில்...
    அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த நாள், மார்பக புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    கல்லூரி வளாகத்தில் மாரத்தான் ஓட்டப் போட்டியை முதல்வர் உஷா சதாசிவம் தொடங்கி வைத்தார். ஓட்டேரி வரை சென்று கல்லூரிக்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.
    இரண்டாமாண்டு மாணவர் தினேஷ் முதலிடத்தையும், வடிவேல் இரண்டாமிடம், பாலசந்தர் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மருத்துவ துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சவுந்திர பாண்டியன், குடியிருப்பு மருத்துவர் சி.இன்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஆம்பூரில்...
     முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    பள்ளியின் தலைமை ஆசிரியர் செ.ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆம்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உசேன் ஷெரீப் கலந்து கொண்டு அப்துல் கலாமின் சிறப்புகளை விளக்கி பேசினார். மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை தேவிபாலா நன்றி கூறினார்.
    கலாம் உருவக் கோலம்...
    ஆம்பூர் பாரதி கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியின் நிறுவனர் எம்.சிவக்குமார் தலைமையில் பெரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே நர்சிங் மாணவர்களால் வண்ண கோல மாவால் அப்துல் கலாமின் உருவப் படம் வரையப்பட்டிருந்தது.
    கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, பெரியாங்குப்பம் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயமணி, கல்லூரியின் துணை முதல்வர் டோமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    வெள்ளக்கல் கிராமத்தில்...
    மாதனூர் ஒன்றியம் வெள்ளக்கல் கிராம ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் பேச்சு, பாட்டு, ஓவியம் ஆகிய போட்டிகளில் நடைபெற்றது. போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆசிரியர்கள் எஸ்.ஜெகன், கே. ஹரிபாபு, எம்.சரளா ஆகியோர் பங்கேற்றனர்.
    அரக்கோணத்தில்...
     அரக்கோணத்தை அடுத்த நாகவேடு, அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாரத முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மூத்த ஆசிரியை டி.மேரி சகுந்தலா மாலை அணிவித்தார். இதில் ஆசிரியைகள் நளினகுமாரி, விக்டோரியா ஸ்டெல்லா, ஆசிரியர்கள் என்.ராஜேந்திரன், திருமணி பொற்செல்வன், பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஆற்காட்டில்...
    ஆற்காட்டில் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மகாத்மா முதியோர் இல்லத் தலைவர் ஜெ.லட்சுமணன தலைமை வகித்து, கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். இதில் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அண்ணாமலையார் அறக்கட்டளை அறங்காவலர் கு.சரவணன், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் பொன் ராஜசேகர்,அறக்கட்டளைத் தலைவர் வி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ரத்த தான முகாம், இலவச மரக்கன்றுகள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
    ஆற்காடு தோப்புகானா நகராட்சி (தெற்கு) உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் மணிவண்ணன், லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அப்துல்கலாம் குறித்த பேச்சு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்களுக்கு நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன,இதில் புலவர் முத்துகுப்புசாமி, எஸ்.பாஸ்கரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.ஈஸ்வரப்பன் தலைமையில் அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் பள்ளியின் செயலாளர் கே.சொல்முத்தழகன், முதல்வர் தேவராஜன், நிர்வாக அலுவலர் கே.வேலானந்தன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமையில் கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
    குடியாத்தத்தில்...
     குடியாத்தம் கிரீன் டவுன் அமைப்பு சார்பில், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் வில்வா தலைமை வகித்தார். செயலர் செந்தில் வரவேற்றார். கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞர் கே.எம்.பூபதி ஆகியோர் 3,000 மரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து ஏரிக் கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    நிர்வாகிகள் உமாசங்கர், பரந்தாமன், சித்து, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் கலாம் பிறந்த நாளையொட்டி அவருடைய திருவுருவப் படத்தை கல்லூரி மாணவிகள் 750 கிலோ உப்பு மற்றும் 25 கிலோ வண்ணப் பொடிகளை பயன்படுத்தி 120க்கு 100 அடி அகலத்தில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகள் குறித்து கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ் எடுத்து கூறினார்.
    வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் பி.நடராஜன், சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ப.சிவராஜி ஆகியோர் அப்துல்கலாம் உருவபடத்திற்கு மாலை அணிவித்து பேசினர். நிகழ்ச்சியில் பேராசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    ஜோலார்பேட்டை டி.வீரப்பள்ளி வேதா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளர் ஏலகிரி வி.செல்வம் கலாமின் உருவ படத்துக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் உருவத்தை செய்து காட்டினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    ஈச்சங்கால் கிராமத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தங்கள், எழுதுகோல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம், செல்வகுமார், தியாகராஜன், வேலு, ஜெகன், ஷகீல் அகமது கலந்து கொண்டனர்.
    வாலாஜாபேட்டையில்...
    வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் குழுமப் பள்ளிகளில் கலாமின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டது.
    விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலாம் அறிவுறுத்திய போதனைகளை ஏற்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். சிபிஎஸ்இ பள்ளி மூத்த முதல்வர் சந்திரா கைலாசம் வரவேற்றார். பள்ளித்தலைமை நிர்வாக அதிகாரி சி.நாகராஜன் பள்ளியின் முதன்மை செயலாளர் பார்வதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அகிலாண்டீஸ்வரி, மெட்ரிக். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, மெட்ரிக் பள்ளி மூத்த முதல்வர் பாவை கார்த்திகேயன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    பிரைட் மைண்ட்ஸ்வித்யோதயா...
    வாலாஜாபேட்டை பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயாவில் அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்நிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai