சுடச்சுட

    

    சென்னை- பெங்களூரு விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை இயக்கப்படவில்லை. அதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     சென்னை - பெங்களூரு இடையே விரைவு ரயில் விடப்படும் என கடந்த 2014-15ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகளாகியும், கால அட்டவணையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் இந்த விரைவு ரயில் இதுவரை இயக்கப்படவில்லை.  
     தெற்கு ரயில்வேயில் மிகவும் கூட்ட நெரிசலான மார்க்கங்களில் சென்னை-பெங்களூரு மார்க்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த மார்க்கத்தில் தற்போது 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையிலும், அனைத்து ரயில்களுமே முன்பதிவுகள் நிரம்பிய நிலையிலேயே செல்கின்றன. இந்த தினசரி ரயில்கள் இல்லாமல் வாராந்திர அளவில் மேலும் 10 ரயில்கள் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.
     எனினும் சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் மேலும் ரயில்களை இயக்கத் தொடர்ந்து அவ்வப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினரும், அதிக எண்ணிக்கையிலான பயணிகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை கோட்ட மேலாளர் அலுவலகம், பொதுமேலாளர் அலுவலகம், ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம் ஆகிய அலுவலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
     இந்த கோரிக்கைகள் குறித்து 2014-ஆம் ஆண்டு தனி சர்வே நடத்திய தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், 2014-15ஆம் ஆண்டு இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில், அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை-பெங்களூரு இடையே பகல் நேர விரைவு ரயில் விடப்படும் என அறிவித்தார். ஆனால் இன்று வரை ரயில் இயக்கப்படவே இல்லை.
    தொடர்ந்து 2015-16, 2016-17 ரயில்வே நிதிநிலை அறிக்கைகளிலும் இந்த ரயிலை பற்றிய தகவலே இல்லாத நிலையில், கடந்த வருடம் வெளியிடப்பட்ட தெற்கு ரயில்வே கால அட்டவணையில் இந்த புதிய ரயிலுக்கான புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம், நிற்கும் இடங்கள் குறித்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு - கச்சேஹூடா அதிவிரைவு ரயில் மற்றும் சென்னை-ஹைதராபாத் சார்மினார் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் முறையே பெங்களூரு மற்றும் சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பகல் வேளைகளில், அந்த பெட்டிகளைக் கொண்டு புதிய ரயிலான சென்னை- பெங்களூரு விரைவு ரயிலை இரு மார்க்கத்திலும் இயக்க தென்மத்திய ரயில்வே மூலம் முடிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில் அக்டோபரில் வெளியாகி உள்ள ரயில்வே கால அட்டவணையில், அறிவிக்கப்பட்டு இயக்கப்படாத சென்னை-பெங்களூரு ரயிலின் எண்களான 12795- 12796 மாற்றப்பட்டு 22689 - 22690 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அலுவலர்களிடம் கேட்டபோது, இந்த ரயிலின் நிர்வாகத்தை மேற்கொள்ள முதலில் தென் மத்திய ரயில்வே முடிவு செய்திருந்தது. தற்போது இந்த ரயிலின் நிர்வாகம் தென்மேற்கு ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ளது.  
    இந்த சென்னை - பெங்களூரு - சென்னை விரைவு ரயில்கள் இந்த வருடத்துக்குள் இயக்கப்பட வேண்டும் என அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai