சுடச்சுட

    

    மிட்டாளம் ஊராட்சியில் உள்ள ஊட்டல் தேவஸ்தானம் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென ஆம்பூர் பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளிக் கிராமத்தை ஒட்டி ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது. இங்கு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி மூலவராக உள்ள பழைமையான கோயில் ஊட்டல் தேவஸ்தானம்.  விநாயகர், சப்த கன்னிகள், ராமர், நந்தி, நவக்கிரகங்களுக்கு என தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.   சரஸ்வதி கோயிலின் எதிரே எந்தக் காலத்திலும் வற்றாத தீர்த்தக்குளம் உள்ளது. இதில் நீராடினால் தோல் நோய்கள் குணமாகும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
    அதேபோல் வாரத்தின் பிற நாள்களில் முன்னோர் நினைவாக திதி கொடுப்போர் ஏராளமாக வருகின்றனர். வருடந்தோறும்  சித்திரை பெளர்ணமி, ஆடிப்பெருக்கு, காணும் பொங்கல் ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  ஊட்டல் தேவஸ்தானத்தை ஒட்டியுள்ள காடுகளில் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் வகைகள், கரடி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு போன்றவையும், பறவையினங்களும் காணப்படுகின்றன. பல்வேறு மூலிகைகளும், மூங்கில் மரங்களும், பசுமை போர்த்தி இருப்பதால் ஊட்டல் தேவஸ்தானத்தை ஒட்டியுள்ள காடுகள் எப்போதும் பசுமை மாறாமல் உள்ளன. இதனைக் கண்காணிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கோபுரமும் கட்டி வைத்துள்ளனர்.
    ஊட்டல் தேவஸ்தானத்தை ஒட்டி ரெங்கையன் கிணறு, சேஷவன் கிணறு, மாடு ஊட்டல் போன்ற நீர்நிலைகளும் உள்ளன.
    இந்த ஊட்டல் தேவஸ்தானத்தை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்கான அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் அண்மையில் சுற்றுலாத் துறை அலுவலர்கள் ஊட்டல் தேவஸ்தானம் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர். மிட்டாளம் முதல் ஊட்டல் தேவஸ்தானம் வரை உள்ள பாதையை அகலப்படுத்துவது, உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பது, பக்தர்கள் தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம் போன்றவை அமைப்பது, வணிக வளாகங்கள் அமைப்பது, நவீன கழிப்பறைகள் கட்டுவது ஆகியவை குறித்து ஆலோசித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
     ஊட்டல் தேவஸ்தானம் சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஊட்டல் தேவஸ்தானத்தில் இருந்து ஆந்திரத்துக்குச் செல்லும் 10 கி.மீ. பழைய நடைபாதையை தார்ச் சாலையாக மாற்றினால், மேலும் பிரபலமாகும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
    இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஊட்டல் தேவஸ்தானத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai