சுடச்சுட

    

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்படாத தீர்மானத்தை நிறைவேற்றியதாக சுரங்கத்துறை உதவி இயக்குநர் பதில் அளித்துள்ளதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
    ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பாலாற்றுப் படுகையில் பொதுப்பணித் துறை மூலம் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
     லாரி மூலம் மணல் அள்ளுவதற்கு மின்னூர் ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதன்படி மின்னூரில் மணல் குவாரி செயல்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது.
     ஆனால் மின்னூர் பாலாற்றில் மணல் குவாரி செயல்படவில்லை. இதுகுறித்து இயங்காத மணல் குவாரி இயங்குவதாக போலி ஆவணம் தயாரிப்பு என்ற தலைப்பில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி தினமணி நாளிதழில் சிறப்புக் கட்டுரை வெளியானது.  
    இது சம்பந்தமாக அந்த ஊரைச் சேர்ந்த எம்.கே.குணசேகரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கேட்டு, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தார்.  இதற்கு வேலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் பதில் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:  
    மின்னூர் கிராமம் புல எண். 295-ல் 5.25.0 ஹெக்டேர் பரப்பு பாலாற்றுப் படுகையில் 03.03.2016 முதல் 02.03.2017 வரை ஓராண்டுக்கு மணல் குவாரி செயல்பட வேலூர் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
     மேலும் மின்னூர் பாலாற்றுப் படுகையில் லாரியின் மூலம் மணல் எடுக்க மின்னூர் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      ஆனால் மாட்டு வண்டி மூலம்தான் மணல் எடுக்க மின்னூர் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
     இவ்வாறான நிலையில்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டு அனுப்பப்பட்ட மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் லாரி மூலம் மணல் எடுக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ள பதில் தவறானது.  லாரி மூலம் மணல் எடுக்க ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது போல பொதுப்பணித் துறையினரே போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனரா என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
    இதுகுறித்து மின்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி கூறியதாவது:  மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கித்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  லாரியில் மணல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
    மேலும் அப்பகுதியில் மணல் குவாரி செயல்படவேயில்லை.  அவ்வாறு இருக்க மணல் குவாரி செயல்பட்டு நடைமுறையில் இருப்பதாகவும் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தவறான தகவல், போலியான ஆவணம் என பல்வேறு முறைகேடுகள் பொதுப்பணித் துறையினரால் செய்யப்படுவதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai