Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரயில் மறியல்: 900 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரயில் மறியல்: 900 பேர் கைது

    By DIN  |   Published on : 19th October 2016 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்டம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர், அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்திய மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனி தலைமையில் காட்பாடி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த அக்கட்சியைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.    
    அதேபோல, காட்பாடி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 30 பேர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    குடியாத்தத்தில்...
    குடியாத்தம் ரயில் நிலையம் அருகிலிருந்து கட்சியினர் ஊர்வலமாகச் சென்று ரயிலை மறித்தனர்.
     இதில் மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்.பன்னீர், நகரச் செயலர் பி.மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்லபாண்டியன், வாசுதேவன், வேதாசலம், கு.விவேக், குருவி கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துரை செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.காத்தவராயன், கே.சாமிநாதன், சி.சரவணன், சிலம்பரசன் உள்ளிட்ட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மேல்பட்டியில்...
    பேர்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி ரயில் நிலையத்தில், விவசாய சங்கத்தின்   மாவட்ட துணைத் தலைவர் ரகுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட அமைப்பின் மாநில துணைத் தலைவர் அரிமூர்த்தி, மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்டச் செயலர் உதயகுமார், மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணத்தில்...
    அரக்கோணம் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலர் கெளதமன் தலைமையில் சென்னை - பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமையில், நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.
     மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 45 பேரை அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
    ராணிப்பேட்டையில்...
    வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில், மக்கள் நலக் கூட்டணியினர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
     அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த லால்பாக் விரைவு ரயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
     போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் குண்டா சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பி.ராமச்சந்தின் உள்ளிட்ட நிர்வாகிகள், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    இவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், எஸ்.ஆர்.தேவதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சந்திரன், நகர மதிமுக செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயன்றனர்.
     ஆம்பூர் டிஎஸ்பி பிலிப் கென்னடி தலைமையிலான போலீஸார் 80 பேரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
    வாணியம்பாடியில்...
    வாணியம்பாடி ரயில் நிலையத்தில், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு-திருப்பதி, சென்னை- பெங்களூரு ஆகிய 2 விரைவு ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலவரதன், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, நகர தலைவர் பரீத், நகர மதிமுக செயலாளர் நாசீர்கான், தமாகா மாவட்ட தலைவர் குப்புசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லதா, அருள்சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் அன்வர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மருத்துவரணி மாநிலச் செயலாளர் ஞானசேகரன், துரைபாண்டியன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று வாணியம்பாடி வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த பசிஅக்ரம் தலைமையில் பிற்பகல் 2 மணியளவில் பெங்களூரு-திருப்பதி வழியாகச் செல்லும் காக்கிநாடா விரைவு ரயில் முன்பு மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டையில்....
    ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற டபுள் டக்கர் விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரயில் 20 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உள்பட 120 பேரை ஜோலார்பேட்டை நகர போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai