சுடச்சுட

  

  தனியார் கல் குவாரிகளால் வீடுகள், பயிர்களுக்கு பாதிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

  By DIN  |   Published on : 19th October 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனந்தலை ஊராட்சியில் தனியார் கல் குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், விளை பயிர்கள் மீது கல் துகள்கள் படிந்தும் பாதிக்கப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
  ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பானுமதி தலைமை வகித்தார்.
  கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகி வேலம் அருண்குமார் பேசியதாவது:
  வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் ஆகிய வட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்
  பயிர்கள் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் நிறமாக மாறி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும், இதுவரை அதற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வரும் கார்த்திகை பட்டத்தில் பயிர் செய்யத் தேவையான நிலக்கடலையை வேளாண் துறையினர் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
  இதையடுத்து விவசாயிகள் வள்ளுவம்பாக்கம் காசிநாதன், அனந்தலை முனிசாமி ஆகியோர் பேசியதாவது:
  அனந்தலை ஊராட்சியில் அமைந்துள்ள சுமார் 800 ஏக்கர் பரப்பிலான மலையில் உள்ள பாறைகளை தனியார் கல் குவாரி உரிமையாளர்கள் அரசு விதிகளை மீறி, அதிக அளவிலான வெடி பொருள்களை பயன்படுத்தி இரவு பகலாக பாறைகளை தகர்த்து வருகின்றனர். இதனால் ஏற்படும் அதிர்வுகளால் அனந்தலை, முசிறி, செங்காடு, மோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றின் மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை பயிரிடப்பட்டுள்ள விளை பயிர்கள் மீது படிந்துள்ளது. இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அனந்தலை மலையை சுற்றியுள்ள கசிவுநீர்க் குட்டைகள் மூடப்படுவதையும், மலையில் இருந்த மரங்களை அழித்து மலையை சுரண்டுவதையும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை துறை, வனத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்
  என்றனர்.
  பின்னர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் மனு அளித்தனர். மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பானுமதி, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai