சுடச்சுட

  

  15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் துவரைச் சாகுபடி செய்ய இலக்கு: மாவட்ட ஆட்சியர்

  By DIN  |   Published on : 21st October 2016 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thuvarai

  தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நிகழாண்டில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் துவரைச் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

  மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் வியாழக்கிழமை
  நடைபெற்றது.

  அப்போது, திருப்பத்தூர் வட்டம், மடவாளம் ஊராட்சிக்கு உள்பட்ட காளத்தியூர் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 1.5 ஹெக்டேர் பரப்பளவில் மாதேஸ்வரன் என்ற விவசாயி பருத்தி உற்பத்தி நடவு முறையில் ஊடுபயிராக துவரைச் செடிகள் பயிரிட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நேரில் பார்வையிட்டார்.

  தொடர்ந்து, காவாப்பட்டரையில் வடிவேல் என்பவரின் மாந்தோப்பு, தென்னந்தோப்புகளில் விதைப்பு முறையில் ஊடுபயிராக துவரைச் செடிகள் பயிரிடப்பட்டிருப்பது, குரிசிலாப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட முத்தம்பட்டு பள்ளவள்ளி கிராமத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் தண்டபாணி என்பவர் அரசு மானியத்துடன் பசுமைக்குடில் அமைத்து ரூ. 17.80 லட்சம் செலவில் 2,000 சதுர மீட்டர் பரப்பில் சாமந்தி மலர் உற்பத்தி செய்வதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறியதாவது:

  வேலூர் மாவட்டத்தில் பயறு சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிகழாண்டில் துவரைச் சாகுபடி பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500 மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் துவரைச் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 50 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பருத்தி, கடலை பயிர்களில் ஊடுபயிராக துவரை பயிரிட்டுள்ளனர். நடவு முறை மூலம் துவரைச் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு ஒன்றரை முதல் இரண்டு மடங்கு உற்பத்தி அதிகரிப்பதுடன், ஹெக்டேருக்கு 2 கிலோ விதைகள் மட்டுமே தேவைப்படும்.

  தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் 2015-16-ஆம் ஆண்டில் 10,000 சதுர மீட்டர் அளவுக்கு பசுமைக்குடில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்றார்.


  வேளாண் துறை இணை இயக்குநர் ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் பொன்னு, உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி, பிரதீப் குமார் உள்ளிட்டோர்
  உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai