சுடச்சுட

    

    காப்புக்காட்டில் செயற்கைக் கால்வாய்: வெள்ளக்கல் கிராம மக்கள் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 23rd October 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் அருகே வெள்ளக்கல் காப்புக் காட்டில் செயற்கையாக புதிய கால்வாய் அமைத்து வருவதற்கு வெள்ளக்கல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    விண்ணமங்கலம் ஊராட்சி, வெள்ளக்கல் கிராமம் அருகே, ஆம்பூர் வனத் துறை எல்லைக்கு உள்பட்ட வெள்ளக்கல் காப்புக்காடு அமைந்துள்ளது. காப்புக் காட்டில் ஊற்றுப்பள்ளம் பகுதியில் தண்ணீர் ஊற்று ஏற்பட்டு, கால்வாய் வழியாக வெள்ளக்கல் ஏரிக்குச் செல்கிறது. அந்த ஊற்றுப் பள்ளத்தில் மழைக் காலத்தில் அதிக அளவு ஊற்று உருவாகி ஏரிக்கு தண்ணீர்வரத்து இருந்து வருகிறது. மழை இல்லாத காலங்களில் சிறிதளவு ஊற்று உருவாகிறது. இந்த ஊற்று வெயில் காலத்தில் வறண்டு விடும்.
    அதனால் மழைக் காலத்தில் உருவாகும் ஊற்று வெள்ளக்கல் ஏரியில் தேங்கும். வெயில் காலத்தில் ஏரியில் தேங்கும் தண்ணீர் ஓரளவுக்கு அப்பகுதி மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு காலத்தில் ஆலங்காயம் வனத் துறை பகுதியான வெள்ளக்குட்டை ஊராட்சி நன்னேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஆம்பூர் வனத் துறை எல்லைக்கு உள்பட்ட வெள்ளக்கல் காப்புக்காடு பகுதிக்கு வந்து ஊற்றுப் பள்ளம் பகுதியிலிருந்து வெள்ளக்கல் ஏரிக்குச் செல்லும் கால்வாயிலிருந்து செயற்கையாக புதிய கால்வாய் வெட்டி வெள்ளக்குட்டை ஊராட்சிக்கு உள்பட்ட நன்னேரி மற்றும் வெள்ளக்குட்டை கிராமப் பகுதியில் உள்ள சிறிய தடுப்பணை மற்றும் ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர்.
    சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு புதிய கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளக்கல் கிராமத்துக்கு இயற்கையாகச் செல்லும் தண்ணீர்வரத்துக் கால்வாயை மண்ணைக் கொட்டி அடைத்துள்ளனர்.
    தங்கள் பகுதியிலிருந்து உருவாகி தங்கள் பகுதியில் உள்ள வெள்ளக்கல் ஏரிக்கு வர வேண்டிய தண்ணீரை, வேறு பகுதியான வெள்ளக்குட்டை ஊராட்சி நன்னேரி கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வனத் துறையினரின் அனுமதியின்றி புதிய கால்வாயை உருவாக்கியுள்ளதற்கு வெள்ளக்கல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
    இதுகுறித்து மனு அனுப்பியும் வனத் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
    அண்மையில், ஆம்பூர் வனத் துறையினர் சென்று புதிய கால்வாய் செல்லும் பகுதியை அடைத்துவிட்டு, சட்ட விரோதமாக மூடப்பட்டிருந்த பழைய இயற்கையான கால்வாயில் கொட்டப்பட்டிருந்த மண்ணை எடுத்து, வெள்ளக்கல் ஏரிக்குச் செல்லும் தண்ணீர் வரத்து கால்வாயை திறந்து விட்டுள்ளனர். ஆனால் மீண்டும் வெள்ளக்குட்டை ஊராட்சி நன்னேரி கிராமப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்குச் செல்லும் புதிய கால்வாயை திறந்துவிட்டு, பழைய இயற்கையான கால்வாயை மூடிவிட்டனர்.
    நீதிமன்றத்தை நாட முடிவு:
    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத் துறைக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வெள்ளக்கல் கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி அது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாக, விண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க வேலூர் மாவட்டச் செயலாளர் வ.அருள்சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து ஆம்பூர் வனச் சரக அலுவலர் ஜெயபாலிடம் கேட்டபோது, அந்த இடத்தினை எங்களுடைய உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். புதிதாக ஏற்படுத்தப்பட்ட கால்வாயை மூடிவிட்டு, மூடப்பட்ட பழைய இயற்கையான கால்வாயை நாங்கள் திறந்துவிட்டோம். எனினும் நன்னேரி கிராம மக்கள் பழைய கால்வாயை மூடிவிட்டு, புதிய கால்வாயை திறந்து விட்டுள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மீண்டும் தவறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
    காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து புதிய கால்வாயை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மூடப்பட்ட வெள்ளக்கல் கிராமத்துக்கு வரும் கால்வாயை திறக்கவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெள்ளக்கல் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai