Enable Javscript for better performance
அரக்கோணத்தில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் நகரில் ரூ. 1.20 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
    அரக்கோணம் நகரில் நவீன எரிவாயு தகனமேடை ரூ. 60 லட்சத்தில் கட்ட முதலில் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2010-இல் பணிகள் தொடங்கின. பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கூடுதல் நிதி இருமுறை அளிக்கப்பட்டு மேலும் ரூ. 60 லட்சம் பல தவணைகளாக நகராட்சியால் ஓதுக்கப்பட்ட நிலையில், 2013-இல் நவீன எரிவாயு தகன மேடை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த எரிமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாக
    தினமணியிலும் இருமுறை செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.
    இந்நிலையில் இந்த தகனமேடை திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கண்ணதாசன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் சண்முகம் வரவேற்றார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி எரிவாயு தகனமேடை வளாகத்தை திறந்து வைத்தார். இதில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.ராஜா, நகர அதிமுக செயலர் துரைகுப்புசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    இந்த எரிவாயு தகனமேடை திறக்கப்பட்டதையடுத்து அரக்கோணம் நகர இடுகாடுகளில் கட்டைகள் மூலம் சடலங்கள் எரியூட்டப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவீன எரிவாயு தகனமேடை மூலம் மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் எனவும், சடலங்களை கொண்டு வருவோர், இறந்தவர்கள் குறித்த அடையாளச் சான்றிதழ்களுடன் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 1,500-ஐ செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்தே சடலம் எரியூட்ட அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சடலங்கள் வருவதைத் தவிர்க்க சில மணி நேரங்களுக்கு முன்பாவது சடலம் கொண்டு வரப்பட இருக்கும் தகவலை எரிமேடை பராமரிக்கும் நிறுவன அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai