சுடச்சுட

  

  கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி

  By DIN  |   Published on : 25th October 2016 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணம் நகரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக கோப்புகளில் எழுதப்பட்ட நிலையில், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
  கடந்த 2008-09-ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சி பகுதியில் பாலாற்றில் இருந்து குடிநீரை கொண்டு வர ரூ. 13.57 கோடியில் அரக்கோணம்-திருத்தணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட காலிவாரிகண்டிகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டி 2009-10-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு தொட்டியின் மேல் எழுதப்பட்டது.
   ஆனால் இத்தொட்டியில் இன்று வரை நீர் ஏற்றப்படவே இல்லை. மேலும் அரக்கோணம் -திருத்தணி கூட்டுக் குடிநீர் திட்டம் ஐந்து ஆண்டுகள் செயல்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்ட குடிநீர், காவேரிப்பாக்கத்தில் இருந்து அரக்கோணம் - திருத்தணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுவதால், திருப்பாற்கடல் திட்டத்தை  செயல்படுத்தவே இல்லை. இத்தொட்டிக்காக வால்வுகள் அமைக்கப்பட்ட கீழ்நிலை தொட்டியானது முறையான பராமரிப்பில்லாததால் அதில் கழிவுநீர் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் அசுத்தமான நிலை ஏற்பட்டுள்ளது.
   குடிநீர் திட்டங்கள் மாற்றப்பட்டு நகருக்கு தற்போது சீரான குடிநீர் விநியோகம் நடைபெறும் நிலையிலும், காலிவாரி கண்டிகையில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றப்படவே இல்லை. இப்பகுதிக்கான குறிப்பாக காலிவாரிகண்டிகை பகுதிக்கான குடிநீர் தேவைக்கு இத்தொட்டி பயன்படவே இல்லை. இத்தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு இருந்தால் காலிவாரி கண்டிகை, லஷ்மி நகர், மோசூர், அம்பேத்கர் நகரின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் சீரான குடிநீர் விநியோகம் இருந்திருக்கும்.  
   பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக  ஆர்வலர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai