சுடச்சுட

    

    புரிந்து படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: வெ.இறையன்பு

    By DIN  |   Published on : 25th October 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து புரிந்து படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும் என தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு கூறினார்.
    எவர்கிரீன் அரிமா சங்கம் சார்பில் வேலூர் ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. எவர்கிரீன் அரிமா சங்க துணைத் தலைவர் சி.பி.தேசி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை என்.ஸ்ரீ காயத்திரி தேவி வரவேற்றார்.
    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு பேசியதாவது:
    பாடத்தை மட்டும் படிக்காமல் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் அன்றாடம் நடக்கும் உலக விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் புரட்சி காரணமாக பெண்கள் கல்வி பெறும் நிலை உருவானதோடு, ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர்பதவியில் சிறந்து விளங்குகின்றனர். இருப்பினும் கிராமப்புறங்களில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தற்போது பல்வேறு அமைப்புகள் பெண் கல்வியை ஊக்குவிக்க ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.  உயர்ந்த பதவிக்கு வர சிறு வயதிலிருந்து செய்தித் தாள்களை அன்றாடம் படிக்க வேண்டும். செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படிச் செய்தால் மனித மூளை நன்றாக வேலை செய்யும்.
    பொதுத் தேர்வுகளுக்கு எவ்விதப் பதற்றமும் இல்லாமல் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்த வேண்டும். மனப்பாடம் செய்வதை விடுத்து புரிந்து படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றார் அவர்.
    மாவட்டக் கல்வி அலுவலர் டி.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஆர்.பிரபாகரன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai