சுடச்சுட

    

    "அம்மா' திட்ட முகாம்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 27th October 2016 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் "அம்மா' திட்ட முகாம்களில் இனி அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பர் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறினார்.
    குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சியில் புதன்
    கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
    மனுநீதி நாள் முகாம்களில் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை கோரி தான் பெரும்பாலான மனுக்கள் வருகின்றன. அரசின் பல்வேறு திட்டங்கள் இருப்பது மக்களுக்கு தெரியவில்லை.  தகுதியானவர்கள் அரசின் அனைத்துத் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    இது வரை அம்மா திட்ட முகாம்களில் வருவாய்த் துறையினர் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இனி வரும் காலங்களில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அனைத்து அரசு திட்டங்களும் கிடைக்கும் வகையில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உத்தரவிட்டுள்ளேன்.
    தற்போது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய்கள் எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
    விவசாயத்தை மேலும் செம்மைப்படுத்த, பயிர் பாதுகாப்பு இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
    தொடர்ந்து பயனாளிகளுக்கு ரூ. 41.35 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 38 லட்சம் கடனுதவிகளையும் அவர் வழங்கினார். வேலூர் கோட்டாட்சியர் அஜய்சீனிவாசன், எம்எல்ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன், ஜி.லோகநாதன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் எம்.குணசீலன், வட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஆம்பூரில்...
    ஆம்பூர், அக். 26: ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணி, ஆம்பூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மணிலா, வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
    14 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணை, 6 பேருக்கு வீட்டு மனைப் பட்டா, 29 பேருக்கு குடும்ப அட்டை நீக்குதல், சேர்த்தல், திருத்தம் செய்தல் குறித்த ஆணை வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai