Enable Javscript for better performance
மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப் புலிகள்- Dinamani

சுடச்சுட

    
    chita

    தொலைவில் இருந்து கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சிறுத்தைப் புலி.

    நாட்டறம்பள்ளி அருகே வனப் பகுதியிலிருந்து மீண்டும் ஊருக்குள் நுழைந்த சிறுத்தைப் புலிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதி அருகே கடந்த 5 நாள்களாக இரவு நேரங்களில் 2 சிறுத்தைப் புலிகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
    இதையடுத்து திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் பரமசிவம் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.
    இந்நிலையில் எம்ஜிஆர் நகர் அருகே மலைக் குன்றின் மேல் ஒரு சிறுத்தைப் புலி நடமாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் சிறுத்தைப் புலியை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
    இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் மாவட்ட வன அலுவலர் தேஜாஸ்வி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், வனப் பகுதிக்குள் சென்று சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். திருப்பத்தூர் சார்-ஆட்சியர் அப்துல் முனீர், வட்டாட்சியர் சச்சிதானந்தம் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.
    இந்நிலையில் மாலை 6 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் இரு பக்கமும் 2 சிறுத்தைப் புலிகள் நுழைந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்து, தீப்பந்தங்களை கொளுத்தினர். இதையடுத்து 2 சிறுத்தைப் புலிகளும் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்று மறைந்தன.
    இந்நிலையில் தொடர்ந்து 5 நாள்களாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai