தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம்: ஆட்சியர்
By DIN | Published on : 28th October 2016 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறினார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
தமிழக அரசு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் போட்டிகளை நடத்துகிறது. சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை
சேர்த்தார்.
அதேபோல, இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்துள்ள உங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினப் பயிற்சி இருந்தால் விளையாட்டுத் துறையில் நீங்களும் சாதிக்கலாம் என்றார்.
வீரர், வீராங்கனைகளுக்கு தட களம், குழுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. 400-க்கும் அதிகமான மாற்றுத் திறனாளி வீரர்கள் கலந்து
கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து
கொள்ளவுள்ளனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.