சுடச்சுட

    

    அரக்கோணத்தில் புதை சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆந்திர மாநிலப் பேருந்து வெள்ளிக்கிழமை சிக்கி, ஒருபுறமாக சாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
    அரக்கோணம் நகரில் புதை சாக்கடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நகரில் கனரக வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
    இந்நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் கனரக வாகனங்கள், பேருந்துகள் நகருக்குள் வந்துசெல்ல அனுமதிக்கப்பட்டது. காந்திரோட்டில் பல இடங்களில் குழாய் பதித்த பிறகு, பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. மேலும், புதை சாக்கடைப் பணியின்போது சில இடங்களில் குடிநீர் குழாய்களும் உடைப்பு ஏற்பட்டது. அவைகளும் சரி செய்யப்படாததால், தற்போது பள்ளங்களில் நீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு சென்ற ஆந்திர மாநிலப் பேருந்து தாசில்தார் தெரு வழியே வந்து காந்திரோட்டில் திரும்பியது. அப்போது, பள்ளத்தில் சிக்கி, பேருந்து ஒருபுறமாக சாய்ந்தது. இதையடுத்து, பயணிகள் அலறியபடி பேருந்திலிருந்து வேகவேகமாக இறங்கினர். இதேபோல் அந்த வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கின.
    இதைத்தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் மீட்கப்பட்டன. இதனால், நகரில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து புதை சாக்கடைத் திட்டப் பணியாளர்கள் மண் கொண்டு, பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், அரக்கோணம் நகராட்சிப் பணியாளர்கள் குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai