Enable Javscript for better performance
சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து இலவச முக உறைகள் வழங்கிப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து இலவச முக உறைகள் வழங்கிப் போராட்டம்

    By DIN  |   Published on : 31st October 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகரில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்காததைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கு இலவச முக உறைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம் நகரில் கடந்த பல மாதங்களாக புதைசாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு காந்தி சாலையில் புதை சாக்கடை பணிகள் நடைபெற்றன.
    இப்பணி முடிவுற்ற நிலையிலும் 28-ஆம் தேதி அதே சாலையின் பல இடங்களில் முறையாக சீரமைக்கப்படாததால் புதைசாக்கடை பள்ளங்களில் பேருந்துகளும், லாரிகளும் சிக்கி நின்றன. மேலும் குடிநீர் குழாய்களும் பல இடங்களில் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக ஓடியது.
    இந்நிலையில் புதைசாக்கடை திட்டப் பணியாளர்களும், அரக்கோணம் நகராட்சி குடிநீர் விநியோகப் பிரிவு பணியாளர்களும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நகரின் முக்கியச் சாலையான காந்தி சாலையில் பல இடங்கள் மேடும் பள்ளமாக உள்ளன.
    தார்ச் சாலை எனும் நிலை போய் மண்சாலையாக மாறி, வாகனங்கள் செல்லும்போது பின்னால் வருபவர்கள் விபத்தை சந்திக்கும் அளவுக்கு தூசி எழுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சாலையைச் சீரமைக்காததைக் கண்டித்து, சாலையில் செல்வோருக்கு முக உறை இலவசமாக அளிக்கும் நிகழ்ச்சியை அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.
    நிகழ்ச்சிக்கு கட்சியின் வேலூர் வடக்கு மாவட்டத் தலைவர் கெளதமன் தலைமை வகித்தார். மாநில வழக்குரைஞர்கள் அணி துணைச் செயலர் தமிழ்மாறன், மாவட்ட செய்தித் தொடர்பு செயலர் ச.சி.சந்தர், அரக்கோணம் சட்டப் பேரவை தொகுதி துணைச் செயலர் முள்வாய்சேகர், நெமிலி ஒன்றியச் செயலர் ரவிசந்திரன், அரக்கோணம் ஒன்றியச் செயலர் வஜ்ரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    இதில் சாலையில் வாகனங்களில் சென்றவர்களுக்கும், நடந்து சென்ற பொதுமக்களுக்கு முக உறைகளை வழங்கினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai