தமிழகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள் அனைத்தும் அதன் அடையாளத்தை இழந்து நிற்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கவலை தெரிவித்தார்.
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா, புதிய குடியிருப்பு வளாகத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுப் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் 2017 மரக் கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியர் பேசியதாவது:
தற்போது நாம் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாட வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். இந்த நாளில் "மக்களை இயற்கையுடன் இணைத்தல்' என்ற கருப்பொருளை வரையறுத்து கொண்டாடி வருகிறோம்.
நாம் தனியாகவும், இயற்கை தனியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய ஆறுகளான காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை உள்ளிட்ட ஆறுகள் அனைத்தும் வறண்டு, அதன் அடையாளத்தை இழந்து நிற்கின்றன. இயற்கையை நாம் புரிந்துகொள்ளாமல், இயற்கையோடு இணைந்து வாழாமல், அதன் தன்மையை இழந்து விட்டு நாம் வாழ்ந்து வருவதே இதற்கு காரணம். பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரவேண்டும்.
அக்காலத்தில் ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்க ஏதுவாக ராஜாக்கள் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாத்தனர்.
தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே மிகப் பெரிய ஏரி வீராணம் ஆகும். அதன் உண்மையான பெயர் வீர நாராயண ஏரி என்பதாகும். இந்த ஏரியைப் பற்றி பொன்னியின் செல்வன் நூலை படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். காவிரி கொள்ளிடத்தில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வீராணம் ஏரியில் நிரம்பி கடல் போல காட்சி அளிப்பதாக வந்தியத் தேவன் குதிரை மீது பயணிக்கும் போது மிக அழகாக வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த ஏரியின் தண்ணீரைப் பயன்படுத்தி அப்பகுதி முழுவதும் அதிகப்படியான நெல் விளைந்த காரணத்தால் சோழ நாடு சோறுடைத்த நாடு என போற்றப்பட்டு, மிகப் பெரிய புரட்சியைக் கண்டது.
வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளாக காவேரிபாக்கம் ஏரி, மகேந்திரவாடி ஏரிகள் உள்ளன. இதே போல அதிகப்படியான ஏரிகள் நெமிலி மற்றும் காவேரிபாக்கம் வட்டங்களில் உள்ளன. ஆனால் அந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளன.
தற்போது தமிழக அரசு ஏரிகளை தூர்வாரி அங்குள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவின் போது, அப்பகுதி விவசாயிகள் 40 ஆண்டுளுக்கு முன்பு 2 போகம் விளைந்த பகுதியில், தற்போது ஒரு போகம் மட்டுமல்ல மானாவாரி பயிரில் கடலை கூட பயிர் செய்ய முடியாத நிலைக்கு உள்ளதாகத் தெரிவித்தனர். இதற்கு இயற்கையை புரிந்து கொள்ளாமல் நீர்நிலைகளைப் பாதுகாக்க தவறிவிட்டதே காரணம்.
மேலும் நீர்நிலைகளையும், நீர்வரத்து கால்வாய்களையும் பாதுகாக்காமல் ஆக்கிரமித்துவிட்டு அரசை குறை கூறி வருகிறோம்.
பெல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனத்துக்கு அருகே உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலையை தத்தெடுத்து தூர்வாரி மக்கள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விழாவை பெல் நிறுவன செயல் இயக்குநர் கே.கலைச்செல்வன் தொடங்கி வைத்து பேசும்போது, இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பெல் நிறுவன வளாகத்தில் 2017 மரக் கன்றுகள் நடப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 697 மரக் கன்றுகள் நட்டு வளர்த்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பெல் நிறுவனம் சார்பில் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வெப்பமயமாகி வரும் பூமியில் இளைப்பாற மரங்கள் மட்டுமே இயற்கையான சூழலை தரும் என்றார்.
விழாவில், கோட்டாட்சியர் ர.ராஜலட்சுமி, வட்டாட்சியர் டி.பிரியா, டி.எஸ்.பி. விஜயகுமார், பெல் நிறுவனப் பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.