அகரம்சேரி பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் வியாழக்கிழமை பாலாற்றில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகரம்சேரி பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள 8 கிணறுகள் மூலம் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அண்மையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போதே அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அகரம்சேரி பாலாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் குறைந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். அதனால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாவர். எனவே மணல் குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் அகரம்சேரி கிராம மக்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பாலாற்றில் ஒன்று திரண்டு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தால் சட்டப்படியாக அதனை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம், போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.