வேலூர் மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்க பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவி வழங்கப்பட்டு வருவதால், தரமில்லாத உர விற்பனை, ஏமாற்று வேலை இனி முற்றிலும் தடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் மானிய விலையில் உரங்களைப் பெற்று அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், அமோனியம் சல்பேட் போன்ற உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இந்த உரங்களுக்கான மானியத் தொகையை உர விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கி வந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கையின் பயனாக, உர மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடையவும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதையும், பதுக்கலையும் தடுக்கும் வகையில் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் உரங்களை விற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 250 சில்லறைக் கடைகள், 61 மொத்த விற்பனை கடைகள், 181 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மானிய விலையில் உரங்கள் விற்கப்படுகிறது.
இந்தக் கடைகளுக்கு ரூ. 27,500 மதிப்புள்ள பாயின்ட் ஆப் சேல் கருவி உர நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 68 ஆயிரம் விவசாயிகளுக்கு வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மானிய விலையில் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கருவியில் உர இருப்பு, விற்பனை விவரங்கள் பதிவாகும் என்பதால் முறைகேடு செய்ய முடியாது.
மேலும், மானிய விலையில் உரம் பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைரேகையை பதிவிட வேண்டும். இதன் மூலம் விவசாயி எங்கு வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பை 36 ஆயிரம் அலகுகளாகப் பிரித்து, மண்வளத் தன்மை, எந்த வகையான பயிர்களைப் பயிரிடலாம் என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆய்வு விவரம் பாயின்ட் ஆப் சேல் கருவியில் இணைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முறைகேடு, பதுக்கலைத் தடுக்கும் வகையில் உர விற்பனை நிலையங்களுக்கு பாயின்ட் ஆப் சேல் கருவி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆதார் எண், கைரேகை பதிவு செய்வதால் விவசாயி எங்கு வேண்டுமானாலும் உரங்களை மானிய விலையில் பெற முடியும். வருகிற மே 31-ஆம் தேதி வரை மட்டுமே கையால் எழுதப்பட்ட ரசீதுகள் வழங்கப்படும்.
வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் பாயின்ட் ஆப் சேல் கருவியில் தான் ரசீதுகள் வழங்கப்படும். அந்தந்த வட்டாரத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரங்கள் விற்பனை செய்யப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.