ஆம்பூர் நகரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் உள்பட 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ஆம்பூரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் ஆம்பூரில் டாஸ்மாக் கடையை அமைக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்தனர். அதன்படி ஆம்பூர் கே.எம்.நகர் நதிசீலாபுரம் பகுதியில் கடந்த மே 4-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கடை இயங்கியது. அப்போது, பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து கதவை உடைத்தனர்.
பின்னர், மதுபாட்டில்களை வெளியே எடுத்து வந்து வீசி அடித்து நொறுக்கினர். மேலும் கடையின் விற்பனையாளரை விரட்டியடித்தனர். பொதுமக்களின் போராட்டம் மற்றும் பலத்த எதிர்ப்பின் காரணமாக திறக்கப்பட்ட அன்றே டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் டாஸ்மாக் கடையை சேதப்படுத்தி, அரசுப் பணியாளரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக ஆம்பூர் நதிசீலாபுரம், கே.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர்அஹமத் (39), இளங்கோ (45), அறிவழகன் (34), வினோத் (20), பிரதீப் என்ற ஹசானுல்லா (34), பிரதாப் (34) ஆகிய 6 பேரை போலீஸார்
கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.