ஜிஎஸ்டி வரியை எதிர்த்து 30-இல் கடையடைப்பு: மாவட்டத்தில் 5,000 ஓட்டல்களை மூட முடிவு

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து வரும் 30-ஆம் தேதி நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 5,000 ஓட்டல்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து வரும் 30-ஆம் தேதி நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 5,000 ஓட்டல்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் ஆர்.வெங்கடகிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ்.எம்.நாகராஜன், நிர்வாகி எஸ்.உதயசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரத் தலைவர் எஸ்.இளங்கோவன்
வரவேற்றார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்டத் தலைவர் என்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய அரசு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டியால் ஓட்டல்களுக்கு 18 சதவீதம் வரையில் வரிவிதிக்கப்பட இருக்கிறது. இந்த வரியை உணவருந்த வரும் சாமானிய மக்களிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதைக்  கருத்தில் கொண்டு வரியை 3 முதல் 5 சதவீதத்துக்குள் நிர்ணயிக்க
வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரும் 30-ஆம் தேதி 24 மணி நேர கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.   
இந்தக் கடையடைப்பில் தமிழகம் முழுவதிலும் தேநீர் கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை ஒரு லட்சம் கடைகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5,000 ஓட்டல்களும் கடையடைப்பில் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இச்சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com