இலவசமாக இடம் கிடைத்தால் மட்டுமே நகரப் பகுதியில் மின்வாரிய அலுவலகம் திறக்கப்படும் என அரக்கோணத்தில் தினமணி செய்தியாளரிடம் வேலூர் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ள நுகர்வோர் யாருமே வராத நிலை இருப்பதால் ஒவ்வொரு வாரமும் அக்கூட்டம் கோட்ட அலுவலர்கள் கூட்டமாகவே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் வந்தார். ஆனால் மின்நுகர்வோர் யாரும் இல்லாத நிலையில் கோட்ட அலுவலர்கள் கூட்டம் தொடங்கியது.
இந்நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் தனது குறை குறித்து தெரிவிக்க வந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
அரக்கோணம் நகரப் பகுதியில் இருந்த அலுவலகம் மூடப்பட்டு நகரப் பகுதியை விட்டு தள்ளி அமைந்துள்ளது. மீண்டும் நகரப் பகுதியில் மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட வேண்டுமெனில் பொதுமக்களோ அல்லது அரசு நிர்வாகமோ எங்களுக்கு இலவசமாக இடம் கொடுத்தால் மட்டுமே நகர அலுவலகம் திறக்கப்படும். அதுவரை நகரில் அலுவலகம் திறக்கப்பட மாட்டாது.
தற்போது நகரப் பகுதியில் இயங்கி வரும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும் நகருக்கு வெளியே மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரில் திருத்தணி சாலை, காந்தி சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் அதற்குண்டான செலவின நிதியை அளிக்காததால் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.