திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகரின் மையப் பகுதியான பஉச நகரில் உள்ள சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் இங்கு பல டன் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த கிடங்கில் மர்ம நபர்கள்அவ்வப்போது தீ வைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவுசிங் போர்டு, பெரியார் நகர், காமராஜர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பலர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த குப்பைக் கிடங்கிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நகராட்சி மூலம் கடந்த ஜூலை மாதம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து, உரம் தயாரிக்க ரூ. 1.20 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி தனியாருக்கு ஏலம் விடப்பட்டது.
ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் நகராட்சி நிர்வாகம் இதற்கான பணி உத்தரவை வழங்கவில்லையெனக் கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் அதிகரிப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமாரிடம் கேட்டதற்கு, பணி உத்தரவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் பணி ஆரம்பிக்கப்படும் என்றார். விரைவில் பணி ஆரம்பித்து மக்களை சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து மீட்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.