ஆம்பூர் பாலாற்றுப் பகுதிக்கு வியாழக்கிழமை வெள்ளநீர் வரத் தொடங்கியதால், பாலாற்றில் முறைகேடாகப் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புச் சாலைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
பாலாற்று நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடிக்கு புதன்கிழமை காலை வந்த வெள்ளநீர், வியாழக்கிழமை ஆம்பூர் பகுதி பாலாற்றுக்கு வந்தது. பாலாற்றில் முள்செடிகள் ஆங்காங்கே வளர்ந்து தண்ணீர் செல்லும் பாதை அடைபட்டுள்ளது.
இதனால் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்லக் கூடிய அபாயம் நிலவியது. அதனைத் தடுக்க வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் பாலாற்றுத் தரைப்பாலம், சுண்ணாம்புக் காளவாய், மளிகைதோப்பு ஆகிய பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் இருந்த முள் செடிகளை அகற்றினர்.
மேலும் சில இடங்களில் பாலாற்றில் முறைகேடாகப் போடப்பட்டிருந்த சாலைகளால் தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் அச்சாலைகளையும் பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தினர்.
சில பகுதிகளில் அச்சாலைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலைகளை அகற்றாவிட்டால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதேபோல சாலைகள் இருப்பதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் சென்று வெள்ளத்தில் சிக்கி விடக்கூடிய அபாயமும் நிலவுவதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டியது தங்களது கடமை என ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி தெரிவித்தார்.
இதனையும் மீறி எதிர்ப்பு கிளம்பிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பாலாற்றில் போடப்பட்டிருந்த சாலைகள் வெட்டி அகற்றப்பட்டன.
மேலும் கரையோரப் பகுதி வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டனர். பாலாற்றில் முள்செடிகள், மண், சாலைகள் அகற்றும் பணியை திருப்பத்தூர் சார்-ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி, வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாலாறு ஆக்கிரமிப்பு : பாலாற்று கரையோரத்தின் பெரும்பகுதிகள் விவசாய நிலங்களாகவும், வீடுகளாகவும், தொழில் நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ள நீர் சீராகச் செல்ல முடியாமல் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து மோசமான விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித்துறையினர் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர். அதனால் பாலாற்றுக் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.