பள்ளேரி கிராமப் பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் பள்ளேரி கிராம விவசாயி ராஜாவின் முயற்சியின் பலனாக கிராம மக்கள் ஒன்றிணைந்து சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை புதன்கிழமை நடவு செய்தனர்.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரம், வறட்சியை தாங்கி வளரும். மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தைக் காக்கும். வேரில் இருந்து நுனி வரை மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கிழைக்காத இயற்கைப் பொருள்களை அளிக்கும் கற்பகவிருட்சம் என பனை மரத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம் தற்போது அழிவின் அபாயத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
"மிச்சமிருக்கும் மரங்களையும் வெட்டி அழித்து விட்டால், மழை வருமான்னு வானத்தைப் பார்ப்பதை நிறுத்திவிடலாம்' என்று மரங்கள் அழிக்கப்படுவது குறித்து அண்மையில் முகநூலில் இளைஞர் ஒருவருவர் பதிவு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதுபோல, சமூக வலைதளங்களில் பதிவிடுவது மட்டுமன்றி நேரடியாக களத்தில் இறங்கி மரக் கன்றுகள் நடுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், விவசாயத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வ முயற்சிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, ராணிப்பேட்டை அருகே உள்ள கீழ் பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜா, தனது கிராமத்தின் சூற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக கடந்த மே மாதம் 8-ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் இலக்கை செயல்படுத்தும் விதமாக கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் ஆயிரம் தென்னங்கன்றுகள், மா செடிகள் வழங்கி நடச் செய்தார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளேரி, கீழ் பள்ளேரி கிராமப் பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து, கரைகளைப் பலப்படுத்தும் விதமாக விவசாயி ராஜா கிராம மக்களுடன் இணைந்து சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை புதன்கிழமை நடவு செய்தார். மேலும், நீர்வரத்துக் கால்வாய்கள், பொது இடங்களிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
மரக்கன்றுகள், பனை விதைகள் நடவு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என விவசாயி ராஜா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.