ஆம்பூர் அருகே 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சிறு தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
ஆம்பூர் பகுதியில் கானாற்றின் குறுக்கே கிராமப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் பல லட்ச ரூபாய் செலவில் சிறு தடுப்பணைகள் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன. தரம் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாலும், முறையாக பராமரித்து சீரமைக்கப்படாததாலும் பல தடுப்பணைகள் ஏற்கெனவே உடைப்பு ஏற்பட்டிருந்தன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆம்பூர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை பகுதி கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அங்கு கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதேபோல் கானாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் தண்ணீர், கரையோரத்தில் குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட கிணற்றின் சுற்றுச் சுவரையும் உடைத்துக் கொண்டு கிணற்றுக்குள் புகுந்தது. அதனால் கிணற்றில் நீர் நிரம்பியுள்ளது.
பல்வேறு கழிவுகளுடன் கலந்து வந்துள்ளதால் அவற்றை பயன்படுத்தும் போது, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.