கட்சித் தொண்டர்களை விலை கொடுத்து வாங்க முடியாது என மாநில வணிக
வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
ஆம்பூரில் நகர அதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் தற்போது கட்சியைக் கைப்பற்ற முயன்று வருகின்றனர். கட்சிக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகளையும், பணத்தையும் பயன்படுத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கின்றனர். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் கட்சித் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது.
ஆம்பூர், குடியாத்தம் எம்எல்ஏக்கள் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான். ஆனால், தற்போது அவர்கள் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அண்மையில் வேலூர் எம்.பி., டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர்களுக்காக கட்சித் தொண்டர்கள் பாடுபட்டு வெற்றி பெறச் செய்ததை மறந்துவிட்டு அங்கு சென்றுள்ளனர்.
டிடிவி தினகரன் தரப்பினர் என்னையும் மிரட்டி பார்க்கின்றனர். அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். கட்சியிலும், அரசு சார்பிலும் எதாவது பணி நடைபெற வேண்டுமானால் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான என்னை தொடர்பு கொள்ளுங்கள். இல்லையெனில் ஆம்பூர் நகரச் செயலாளர் மதியழகனை தொடர்பு கொள்ளுங்கள். அரசு அதிகாரிகளிடமும் நான் தெரிவிக்கிறேன்.
கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் லட்சியங்களை நிறைவேற்ற வேண்டும். கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு ஆம்பூர் நகரச் செயலாளர் எம். மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூர் நகரமன்ற முன்னாள் துணைத் தலைவர் கே. நஜர் முஹம்மத், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்
சி. அன்பரசன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், கே. மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், செப். 6: குடியாத்தம் தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் வீரமணி பேசியதாவது:
கடந்த பேரவைத் தேர்தலின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்காக நான் கடுமையாக உழைத்தேன். நான் போட்டியிட்ட ஜோலார்பேட்டை தொகுதியைக் கூட மறந்துவிட்டு குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில் போட்டியிட்டவர்களுக்காக, தொண்டர்களுடன் கடுமையாக உழைத்து அவர்களை வெற்றி பெறச் செய்தேன். அதேபோல, மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ப. செங்குட்டுவன் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். அவரும் இன்று தினகரன் அணிக்குச் சென்று விட்டார். இவர்களை, வாக்களித்த தொண்டர்களும், பொதுமக்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றார் .
கூட்டத்துக்கு நகரச் செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தார். அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன் வரவேற்றார். நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எம். பாஸ்கர், நிர்வாகிகள் ஆர். மூர்த்தி, ஆர்.கே. மகாலிங்கம், ஜி. தேவராஜ், எஸ்.ஐ. அன்வர்பாஷா, எஸ்.என். சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.