கானாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்: தடுப்பணைகள் உடைப்பு

ஆம்பூர் அருகே கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் ஊராட்சியை ஒட்டி, சாணாங்குப்பம் காப்புக் காடுகள் உள்ளன.
கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் வெள்ளக்கல் கானாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாச்சார்குப்பம், காட்டுக்கொல்லை, வெள்ளக்கல் ஆகிய பகுதிகளிலும், சாணாங்குப்பம் காப்புக் காடுகள் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
 இதனால் வெள்ளக்கல் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காட்டுக்கொல்லை, குட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறு தடுப்பணைகள் உடைந்தன.
வனப் பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள பல்வேறு சிறு தடுப்பணைகள் முறையான பராமரிப்பு செய்யப்படாததாலும், உடைந்து போன சிறு தடுப்பணைகளைச் சீரமைக்காததாலும், மழைக் காலங்களில் சேமிக்க வேண்டிய தண்ணீர் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, கோடைக் காலத்தில் சிறு தடுப்பணைகளைப் பராமரித்து, சீரமைக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ள அபாய  முன்னெச்சரிக்கை
 பாலாற்றில் வெள்ள அபாயத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் சார்-ஆட்சியர் ஆம்பூரில் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் பாலாற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வாணியம்பாடி வரையிலும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆம்பூர் பாலாற்றுப் பகுதியிலும் வெள்ள அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதனை  திருப்பத்தூர் சார்-ஆட்சியர் கார்த்திகேயன்  புதன்கிழமை பார்வையிட்டார்.
பாலாற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்த அவர், அப்பகுதியில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வெள்ளம் வந்தால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும்  எச்சரிக்கை அறிவிப்பு செய்ய உத்தரவிட்டார்.   
மேலும் வெள்ளத் தடுப்பு நிவாரண பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.   அப்போது, ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி,  நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எல். குமார், ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் உசேன் ஷெரீப் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com