திருப்பத்தூர் அருகே 10-ஆம் நூற்றாண்டு: நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூர் அருகே 10-ஆம் நூற்றாண்டின் கற்கோடரிகள், நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூர் அருகே 10-ஆம் நூற்றாண்டின் கற்கோடரிகள், நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகே உள்ள கீழ் பழங்கோட்டை கிராமத்தில், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன்காந்தி, தொல்லியல் ஆய்வறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கற்கோடரிகள் மற்றும் 3 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
ஜவ்வாதுமலையில் உள்ள கீழ் பழங்கோட்டை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 3 நடுகற்களை இப்பகுதி மக்கள் செல (சிலை) காரனட கல் என்று அழைக்கின்றனர். இந்த நடுகற்களை யாரும் வணங்குவதில்லை. முதல் நடுகல் 3 அடி உயரமும், 4அடி அகலமும் உள்ளது. 2-ஆவது நடுகல் இரண்டரை அடி அகலமும், மூன்றரை அடி உயரமும் உள்ளது.
3-ஆவது நடுகல் மூன்றரை அடி அகலமும், நான்கரை அடி உயரமும் உள்ளது. இந்த 3 நடுகற்களிலும் உள்ள வீரன் கொண்டை வைத்துள்ளான். இடது கையில் வில், வலது கையில் குறுவாள் உள்ளன. இடைக்கச்சுடன் உறைவாள் உள்ளது. கால்களில் வீரக் கழல்கள் உள்ளன. இந்த கற்களில் எழுத்து பொறிப்புகள் இல்லை. பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இந்த நடுகற்கள் உள்ளதாக கருத முடிகிறது. இதன் வடிவத்தைக் கொண்டு, இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டு எனக் கூற முடியும். சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த இப்பகுதி மக்கள் வரலாற்று அறிவோடும், சிற்பக் கலையிலும் சிறந்தவர்களாகவும் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
மேலும், ஊருக்கு வெளியே உள்ள 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளிய மரத்தின் அடியில் கற்கோடரிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பெரிதும்,  சிறிதுமாக 20-க்கும் மேற்பட்ட கற்கோடரிகள் உள்ளன. இதில், பிள்ளையார், சிவலிங்கம் போன்ற சிலைகளும் காணப்படுகின்றன.
 புதிய கற்கால மனிதர்களால் வேட்டை தொழிலுக்கும், பிற பயன்பாட்டிற்கும், இரும்பைக் கண்டறிவதற்கு முன்பாக கற்கோடரிகள் பயன்படுத்தப்பட்டன. முன்னோர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களை இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது சிறப்புக்குரியது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com