பொலிவிழந்த ஏழைகளின் ஊட்டி...!

ஏழைகளின் ஊட்டி எனஅழைக்கப்படும் ஏலகிரி மலையில் போதிய பராமரிப்பு இல்லாததால்  களையிழந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

ஏழைகளின் ஊட்டி எனஅழைக்கப்படும் ஏலகிரி மலையில் போதிய பராமரிப்பு இல்லாததால்  களையிழந்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏலகிரி மலையில் உள்ள மங்களம் ஏரி பல ஆண்டுகளுக்கு முன்பு தாமரைக் குளமாகக் காட்சியளித்தது. மழை மற்றும் நீர்வரத்து குறைந்ததால் தற்போது கோரைபுற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், இதனருகே உள்ள சிறுவர் பூங்காவின் விளையாட்டு உபகரணங்கள் பாழடைந்துள்ளன.
நிலாவூர் ஏரி அருகே புகழ் பெற்ற கதவநாச்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அருகே உள்ள பூங்கா அலுவலகம், மகளிர் சுய உதவிக் குழு உணவகம் அனைத்தும் பயன்பாடில்லாமல் உள்ளன. இதனால், கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன.
மேலும், இங்குள்ள கூட்டுரான் ஏரி, மஞ்சள் கொல்லை புதூர் ஏரி, அத்தனாவூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மழைநீர் தேக்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் மழைக் காலங்களில் வெள்ளநீர் வீணாகி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு செல்கிறது.
இதுகுறித்து ஏலகிரி குறிஞ்சி வானவில் அறக்கட்டளை நிறுவனர் பொன்.கதிர் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டியும், பூங்காக்களைச் சீரமைக்க வேண்டியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், ஏலகிரி மலையில் சில கின்னஸ் சாதனைகளை செய்து உலக அரங்கில் ஏலகிரியின் பெருமையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் திருக்குறள் தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com