Enable Javscript for better performance
தலித் மக்கள் நலனில் சுணக்கம் காட்டும் தமிழக அரசு: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தலித் மக்கள் நலனில் சுணக்கம் காட்டும் தமிழக அரசு: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 22nd October 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலித் மக்கள் நலனில் தமிழக அரசு சுணக்கம் காட்டி வருவதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டினார்.
    ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்திய குடியரசு கட்சியினர் சனிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செ.கு.தமிழரசன் கூறியதாவது:
    கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, அம்பேத்கர் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதை எதிர்வரும் குளிர்கால பேரவை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
    தமிழகத்தை டெங்கு இடர்பாடுள்ள மாநிலமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து செயல்பட வேண்டும்.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மரணத்தில் சந்தேகம் உள்ளதால், தற்போது பொறுப்பில் இருக்கும்  உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
    மெர்சல் திரைப்படம் மத்திய அரசின் தணிக்கைக்குப் பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தணிக்கைக்  குழுவில் மத்திய பாஜக அரசின் ஆதரவாளர்கள் தான் உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
    எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடித்தளமாக தலித் மக்கள் இருந்து வருகின்றனர். ஆனால்,  தற்போதைய அதிமுக அரசு தலித் மக்கள் நலனில் சுணக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக, 33 தலித் எம்எல்ஏக்களில் 8 பேர் தகுதி நீக்கம்  செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
    ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் பி.சிவகுமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எம்.தங்கராஜ், மாநிலப் பொருளாளர் கே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.தமிழ்குசேலன் வரவேற்றார். பொருளளர் எஸ்.ராஜாராம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai